டாக்கா புறநகர்ப்பகுதியில் ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் இயங்கி வந்த 8 மாடி கட்டிடம் கடந்த 24-ம் தேதி இடிந்து விழுந்தது. சீட்டுக்கட்டு போன்று கட்டிடம் சரிந்து விழுந்த கட்டிடத்தினுள் இருந்த சுமார் 3000 தொழிலாளர்கள் சிக்கினர்.
இதில் ஏராளமான தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமை மாலை நிலவரபப்டி இறந்தவர்களின் எண்ணிக்கை 352 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 900 பேரைக் காணவில்லை. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மீட்புப் பணிகளில் உதவுவதற்காக பொதுமக்களும் ஆர்வத்துடன் கட்டிட இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கிக் கொண்டவர்களை காப்பாற்றினார்கள். இவர்களில் தீதார் உசேன், என்பவர் ஒரு பெரிய சுவற்றை நிமர்த்தியபோது உள்ளே ஒரு 27 வயதான ஒரு பெண், பிரசவித்த ஆண் குழந்தையை கையில் ஏந்தியபடி மயங்கிய நிலையில் இருந்தார்.
குழந்தையின் தொப்புள் கொடி அறுக்கப்படாமல் இருந்தது. அவரை காப்பாற்ற தீதார் உசேன் முனைந்தபோது, ‘முதலில் என் குழந்தையை காப்பாற்றுங்கள்' என்று அவர் பலவீனமான குரலில் கூறினார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உதவியுடன் தாயையும், சேயையும் தீதார் உசேன் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து வந்தார். அங்கிருந்த பெண்கள் குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்து, அந்த பெண்ணை மகப்பேறு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இடிபாடுகளுக்கு இடையே பிறந்து தாயை காப்பாற்றி தன்னையும் பாதுகாப்பாக காப்பாற்றிக் கொண்ட அந்த குழந்தைகயை அனைவரும் அதிசயத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.