
தென்அமெரிக்க நாடான பிரேசிலில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றியானது 20 ஆண்டுகள் கழித்து உலகத் தர வரிசைப் பட்டியலில் அந்நாட்டிற்கு முதல் இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது.
இன்று வெளியிடப்பட்டுள்ள பிபா உலகத் தரவரிசைப் பட்டியலில் ஜெர்மனிக்கான முதல் இடம் குறிப்பிடப்பட்டுள்ளது. மெஸ்சியின் தலைமையில் விளையாடிய அர்ஜென்டினா மூன்று இடங்கள் முன்னுக்கு வந்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
தங்களின் திறமையை வெளிப்படுத்தி போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்த நெதர்லாந்து தரவரிசைப் பட்டயலில் 12 இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்தைப் பிடித்தது. ஜேம்ஸ் ரோட்ரிகஸ் ஆட்டத்தினால் நான்காவது இடத்திற்கு முன்னேறிய கொலம்பியாவும் அதனைத் தொடர்ந்த பெல்ஜியம் மற்றும் உருகுவே நாடுகளும் நான்கு இடங்கள் சரிந்த பிரேசிலை ஏழாவது இடத்திற்குத் தள்ளின.
முதலிடத்தை இழந்த சென்ற வருட சாம்பியன் ஸ்பெயின் ஏழு இடங்கள் சரிந்து எட்டாவதாகவும், சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் முறையே ஒன்பது, பத்தாவது இடங்களையும் பிடித்தன. காலிறுதிக்குத் தேர்வான கோஸ்டாரிகாவின் வெற்றி அந்நாட்டை 12 இடங்கள் முன்னேற்றி 16-வது இடத்தில் வைத்தது.
முதல் சுற்றிலேயே வெளியேறிய ராய் ஹோட்க்சனின் இங்கிலாந்து அணி 10 இடங்கள் சரிந்து 20-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.