இலங்கைக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து அணிக்கும், இலங்கை அணிக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை நியூசிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடித்துக் கொண்டிருந்த நிலையில், நியூசிலாந்து அணியின் சிறப்பான பெறுபேறுகளுக்கு சமிந்த வாஸிற்கு நியூசிலாந்து அணியின் தலைவர் ரொஸ் ரெய்லர் நன்றி தெரிவித்துள்ளார்.
இரு அணிகளுக்குமிடையிலான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியின் விசேட பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டிருந்தார். நியூசிலாந்து அணியின் பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளர் ஷேன் பொன்ட்டிற்கு மேலதிகமாகவே அவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று நிறைவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியடைந்து தொடரைச் சமப்படுத்திய பின்பு கருத்துத் தெரிவித்த நியூசிலாந்து அணித்தலைவர் ரொஸ் ரெய்லர், நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களுக்கு சமிந்த வாஸ் மிகச்சிறப்பான உதவியாக அமைந்ததாகத் தெரிவித்தார்.
நியூசிலாந்து அணியில் இரண்டு இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் காணப்படுவதாகத் தெரிவித்த ரொஸ் ரெய்லர், அவ்விரண்டு பேருடனும், ஏனைய வேகப்பந்து வீச்சாளர்களுடனும் சமிந்த வாஸ் இணைந்து செயற்பட்டதாகத் தெரிவித்தார்.
நியூசிலாந்து அணி சூழலுடன் சமிந்த வாஸ் இலகுவாக இணைந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Dec 1, 2012
சமிந்த வாஸிற்கு நியூசிலாந்து அணி நன்றி தெரிவிப்பு
Posted by AliffAlerts on 09:51 in SL | Comments : 0