BREAKING NEWS

Jan 7, 2013

ரிசானா நஃபீக், மரண தண்டனை எதிர்கொள்ளும் அபாயம்: Dr ஹிபாயா இப்திகர்

சவுதி அரேபியாவில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள ரிசானா நஃபீக், மரண தண்டனையை எதிர்கொள்ளும் அபாயம் இன்னும் இருப்பதாக, சவுதியில் அவரது விடுதலைக்காக போராடி வரும் டாக்டர் ஹிபாயா இப்திகர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் பிபிசி செய்திச்சேவை இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ரிசானாவுக்கு முன்னர் மரண தண்டனையை வழங்கிய சவுதி நீதிமன்றம், அந்தத் தண்டனையை தற்போது உறுதி செய்துள்ளதாக டாக்டர் ஹிபாயா இப்திகார் கூறியுள்ளார்.

இந்த மரண தண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்படாவிட்டாலும், அது எந்த நேரத்திலும் நிறைவேற்றப்படலாம் என்றும் அவர் அச்சம் வெளியிட்டார்.

அதேவேளை இறுதி நேரம்வரை ரிசானாவின் விடுதலைக்காக இலங்கை அரசாங்கமும், ரிசானாவுக்காக செயற்படுபவர்களும் போராடிக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக ரிசானாவுக்கு மரணதண்டனையை விதித்த சவுதி நீதிமன்றம், அவரால் கொலைசெய்யப்பட்டதாகக் கூறப்படும் குழந்தையின் சவுதி பெற்றோர் மன்னிப்பளித்தால் அவருக்கு விடுதலை வழங்கலாம் என்று கூறியிருந்தது.

ஆனால், அவர்கள் இதுவரை அப்படியான மன்னிப்பை வழங்காத காரணத்தால், தற்போது அது அந்த தண்டனையை உறுதி செய்துள்ளதாக டாக்டர் ஹிபாயா கூறினார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &