BREAKING NEWS

Aug 2, 2014

தமிழக மீனவர்கள் வௌ்ளைக் கொடியுடன் கச்சதீவு வருகின்றனர்


இலங்கை கடற்படையினர் பறித்து சென்ற 62 விசைப்படகுகளை மீட்பதற்காக கச்சத்தீவுக்கு புதுகை மீனவர்கள் நாளை செல்ல முடிவு செய்துள்ளனர்.

தமிழக மீனவர்களை அடிக்கடி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்லும் சம்பவம் வாடிக்கையாக இருந்து வருகிறது. மேலும் அவர்களது படகுகளையும் பறித்து செல்லும் செயலும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

இந்த நிலையில் இலங்கை கடற்படை பறிமுதல் செய்து கொண்டு செல்லப்பட்ட விசை படகுகளை மீட்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 25–ந்திகதி முதல் புதுக்கோட்டை மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதே போன்று ரமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களும் 6வது நாளாக வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக அனைத்து விசைபடகு மீனவர்கள் சங்கங்கள் சார்பில் மீனவர்களின் படகு உரிமத்தை ஒப்படைக்கும் போராட்டத்தை அறிவித்தனர்.

அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இருப்பினும் மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்து கொண்டு செல்லப்பட்ட விசைபடகுகளை மீட்பதற்காக திட்டமிட்டப்படி வெள்ளை கொடி கட்டி குடும்பத்துடன் படகுகளில் கச்சத்தீவு செல்ல முடிவு செய்துள்ளனர். இந்த போராட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெறுவதாக அறிவித்துள்ளனர். இதற்காக படகுகளில் வெள்ளை கொடிகளை கட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த போராட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்களுடன் புதுக்கோட்டை மீனவர்களும் கை கோர்க்க தயாராகி உள்ளனர்.

இது தொடர்பாக கோட்டை பட்டினத்தில் மீனவர் பிரதிநிதிகள் ஆலோசனை மேற்கொண்டனர். கச்சசத்தீவு நோக்கி மீனவர்கள் செல்லும் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை நோக்கி வர உள்ள தமிழக மீனவர்களை பாதியிலேயே தடுக்க இலங்கை கடற்படையும் இந்திய எல்லையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதே நேரத்தில் இந்திய கடற்படையும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகி வருகிறது. போராட்டத்தை நடத்தியே தீருவோம் என்று அறிவித்துள்ள மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை தடுத்து நிறுத்தவும் அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &