அண்மைக்காலமாக நாட்டில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான பல்வேறு நடவடிக்கைகள் சகலரையும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளதோடு, நாட்டின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்தது. அந்நடவடிக்கைகள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இம்சைப்படுத்தியதுடன் அவர்களது அன்றாட வாழ்வையும் பெரிதும் பாதித்தது.
ஆபத்தான நிலைமைகளில் றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குனூத் அந்நாஸிலாவை ஓதி வந்தார்கள். அதன் ஒளியில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலமையைக் கவனத்திற்கொண்ட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம்களினதும் நாட்டினதும் பாதுகாப்பு மற்றும் அமைதிக்காக ஐவேளை தொழுகைகளிலும் குனூத் அந்நாஸிலாவை ஓதிவருமாறும், சுன்னத்தான நோன்புகளை நோற்குமாறும் அனைத்து முஸ்லிம்களையும் வேண்டியிருந்தது.
ஜம்இய்யாவின் வழிகாட்டலை ஏற்று நம்மக்கள் சுன்னத்தான நோன்புகளை நோற்று பிரார்த்தனை செய்து வந்ததோடு குனூத் அந்நாஸிலாவையும் தமது தொழுகைகளில் ஓதி வந்தனர். கால நீடிப்பைக் கவனத்திற் கொண்டு மேற்படி குனூத்தை நிறுத்துவதற்கு 25.08.2014 ஆம் திகதி நடைபெற்ற அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. எனவே குனூத் அந்நாஸிலா ஓதுவதை நிறுத்திக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சகல முஸ்லிம்களுக்கும் அறிவித்துக் கொள்கின்றது.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவருக்கும் நல்லருள் பாலிப்hனாக, நாட்டில் அமைதியையும் சுமூக நிலைமையையும் ஏற்படுத்துவானாக.
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா