ஒரு புனித கடமையின் பெயரால் ஏமாற்று, மோசடி, வாக்குறுதி மீறல் முதலான பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதானது அல்லாஹ்வின் சாபத்திற்கும், கோபத்திற்கும் உரிய செயற்பாடுகளாகும்.
இவ்வாண்டு ஹஜ் விவகாரம் இன்னும் மோசமடைந்திருப்பதைப் பார்த்து முழு முஸ்லிம் சமூகமும் ஆவேசமும், ஆத்திரமும் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. உலகளாவிய முஸ்லிம் உம்மத்தின் ஒற்றுமையையும் ஐக்கியத்தையும் யதார்த்த பூர்வமாக பிரகடனப்படுத்தும் ஹஜ்ஜின் பெயராலேயே, சமூக ஒற்றுமை குழிதோண்டிப் புதைக்கப்படும் நிலமையைப் பார்த்து ஒரு முஸ்லிமால் கவலைக் கொள்ளாமல் இருக்க முடியாது.
அற்ப உலக இலாபத்திக்காக ஹஜ் போன்ற ஒரு புனித வணக்கத்தை அசிங்கப்படுத்தும் ஈனச்செயலை எந்தவகையிலும் அனுமதிக்கமுடியாது என்பது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மிக உறுதியான நிலைப்பாடாகும்.
ஹஜ் விவகாரத்தில் மற்றுமொரு மோசமான வடிவத்தை நமது நாடு அண்மையில் கண்டது. ஹஜ் தொடர்பான முரண்பாட்டை முஸ்லிம் சமூக விரோத சக்திகளிடம் கொண்டு சென்றமையே அதுவாகும். சமூக மட்டத்திலோ, நீதிமன்றத்தினூடாகவோ பேசித்தீர்க்கப்படவேண்டிய ஒரு விவகாரத்தை இவ்வாறு முஸ்லிம் சமூக விரோத சக்திகளிடம் கொண்டு சென்றதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாதது என்பது மாத்திரமல்ல, கடுமையாக கண்டிக்கத்தக்க ஒரு விடயமுமாகும்.
எனவே, புனித ஹஜ் கடமை விடயத்தில் அனைத்து தரப்பினரும் அல்லாஹ்வைப் பயந்துக் கொள்ளவேண்டும் என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் வேண்டிக்கொள்வதோடு, ஹஜ் நிர்வாகத்தை மேற்கொள்பவர்களும்,முகவர்களும் ஹஜ்ஜின் புனிதத்துவத்தை கெடுத்துவிடாமல் நடந்துகொள்ளவேண்டும் என்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகிறது.
அஷ்-ஷைக் எம்.எப்.எம். பாழில்
செயலாளர் – ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா