உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் இன்று இடம்பெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் பிரேசில் அணியை 7ற்கு ஒன்று என்ற கோல் கணக்கில் தோற்கடித்து ஜேர்மனி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.
போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜேர்மனி வீரர்கள் முதல் பாதியில் 5 கோல்களை அடித்து பிரேசில் வீரர்களையும் இரசிகர்களையும் கண்ணீர் சிந்த வைத்தனர். பிரேசில் வீரர்கள் கோல்களை போடுவதற்கு பல தடவைகள் பந்தை கோல் கம்பம் நோக்கி நகர்த்திச் சென்ற போதும் ஜேர்மனி கோல் காப்பாளரின் திறமையால் அது சாத்தியப்படவில்லை. இறுதி நேரத்தில் பிரேசில் ஒரு கோல் மாத்திரமே எடுத்து இரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தது.
இரண்டாவது பாதியிலும் ஜேர்மனி வீரர்கள் இரண்டு கோல்களை அடித்து தமது வெற்றியை மேலும் உறுதிப்படுத்திக் கொண்டனர். இந்த நிலையில் பிரேசில் அணியின் உலகக் கிண்ண கனவு இம்முறை ஜேர்மனி வீரர்களால் தகர்க்கப்பட்டுள்ளது. சொந்த மண்ணில் பிரேசில் இந்தத் தோல்வியைச் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1920ஆம் ஆண்டு உருகுவே அணியுடன் 6ற்கு பூச்சியம் என்ற கணக்கில் தோல்வியுற்ற பிரேசில் தற்போது ஜேர்மனி அணியுடன் 7ற்கு ஒன்று என்ற கணக்கில் படுதோல்வியடைந்துள்ளது. இதன்படி 2014 உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை ஜேர்மனி அணி பெற்றுள்ளது.