நேற்று மாலை மாதம்பிட்டிய ஹேனமுல்ல முகாம் பகுதியில் வசிக்கும் இருவரால் இழுத்துவிடப்பட்ட தனிப்பட்ட சர்ச்சை ஒரு சமூகப் பிரச்சினையாக மாறியிருக்கும் நிலையில் தூக்கத்தைத் தொலைத்து விழித்திருக்கும் பிரதேச முஸ்லிம்கள் கட்டம் கட்டமாக சஹர் செய்துமுடித்து வரும் அதேவேளை தொடர்ந்தும் தாக்குதல் அச்சத்தில் இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனிப்பட்ட நபரைத் தேடியே ஆரம்பத்தில் குண்டர் குழுவொன்று வந்திருந்தபோதும் எதிர்பாராத விதமாக பள்ளியில் தொழுகைக்காக வந்தவர்களை கூரிய ஆயுதங்கள் கொண்டு தாக்க முனைந்ததால் ஏற்பட்ட கலவர சூழ்நிலையில் பாதுகாப்பு கருதி முஸ்லிம்கள் தரப்பும் திருப்பி தாக்கியபோது கூட்டத்தில் இருந்த ஒருவரால் வந்திருந்த குண்டர்களில் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து குறித்த நபரைத் தேடிப் பொலிசார் வந்த போதும் அது யார் என அடையாளந் தெரியாத நிலையில் வேறும் மூன்று பேர் கைது செய்யப்பட்டு 14 நாள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போதிலும் கத்தியால் குத்தியவரும் அதேவேளை ஆரம்ப சண்டையின் காரணகர்த்தாவையும் தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிய குண்டர்கள் இது நேரம் தாக்குதல் ஒன்றுக்கு தயாராக இருப்பதாகவும் தற்போது மேலதிக பொலிசார் கடமையில் இருப்பதால் நிலைமை சற்று கட்டுப்பாடடிற்குள் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் சர்ச்சையை உருவாக்கியவர்களில் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்விவகாரம் பொது பல சேனா போன்ற அமைப்புகளின் தூண்டுதலால் இரு சமூகங்களுக்கிடையிலான முறுகலைத் தோற்றுவிக்கும் அபாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் அச்சம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.