எதிர்க்கட்சியின் அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் பொய்யாக்கும் வகையில் தெற்கு மற்றும் கட்டுநாயக்கா அதிவேக பாதை மூலம் 4500 கோடி ரூபா அரசாங்கத்துக்கு வருமானமாகக் கிடைத்துள்ளது.
தெற்கு அதிவேக பாதை திறக்கப்பட்டது முதல் இதுவரையிலான காலத்தில் 3300 கோடி ரூபாவும் அதேபோன்று கட்டுநாயக்க அதிவேக பாதை மூலம் 1200 கோடி ரூபாவும் வருமானமாகப் பெறப்பட்டுள்ளது என நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் கப்பல்துறை கருத்திட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவல தெரிவித்தார்.
தெற்கு அதிவேக பாதை மூலம் மாதாந்தம் 15 கோடி ரூபா வருமானம் கிடைப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். கட்டுநாயக்கா அதிவேக பாதை 2013 ஒக்டோபர் 27ம் திகதி திறக்கப்பட்டது. அன்றிலிருந்து இதுவரை 1200 கோடி ரூபாவை வருமானமாகப் பெற்றுக்கொண்டுள்ளதுடன் இதனூடான வருமானம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மக்கள் அதிவேக பாதையை உபயோகப்படுத்துவது அதிகரித்து வருவதால் வருமானமும் அதிகரித்து வருவதாக குறிப்பிட்ட அமைச்சர்; வார இறுதி நாட்களில் தெற்கு அதிவேக பாதையின் வருமானம் அதிகரிப்பதுடன் அது ஏழு மில்லியனைத் தாண்டுவதாகவும் வார இறுதி நாட்களில் தமது ஊர்களுக்குச் செல்வோரில் 20, 000 பேரின் வாகனங்கள் தெற்கு அதிவேக பாதையூடாகவே பயணிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை இரத்தினபுரி- கொழும்புக்கிடையிலான அதிவேக பாதை மற்றும் வெளி சுற்று வட்டங்களை நிர்மாணிக்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தமக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் இவ்வருட இறுதிக் குள் இந்த நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கிணங்க கொழும்பு – இரத்தினபுரி வரையிலான அதிவேக பாதை இரண்டு மாதகாலங்களில் நிர்மாணிக்கப்படவுள்ளன. இந்த வீதிகளில் நிலவும் வாகன நெருக்கடிகளைக் குறைக்கும் வகையில் 71. 8 கிலோ மீற்றர் தூரத்திற்கு இந்த அதிவேக பாதை அமைக்கப்படவுள்ளது.