காஸா: நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸாவின் ஒரே ஒரு மின் உற்பத்தி மையமும் தகர்க்கப்பட்டது. இதனால் அந்நகரமே இருளில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது.
சர்வதேச நாடுகளின் வேண்டுகோளை ஏற்று தாக்குதல்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், காஸா பகுதி மீதான தாக்குதல்களை திங்கள்கிழமை இரவு முதல் இஸ்ரேல் மீண்டும் தீவிரப்படுத்தியது.
முன்னதாக தாக்குதல் குறித்து எச்சரிக்கும் விதமாக, காஸாவின் வடக்குப் பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைய வேண்டும் என இஸ்ரேல் பாதுகாப்புப்படை சார்பில் துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டன.
இதையடுத்து தனது தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் 60 ஏவுகணைகளை வீசி காஸா மீது தாக்குதல் நடத்தியது. இதில், அங்கு இயங்கி வந்த ஒரே ஒரு மின் உற்பத்தி மையமும் தகர்க்கப்பட்டது.
இது குறித்து காஸாவின் மின் உற்பத்தி நிலையப் பொறியாளரான நடால் டோமன் கூறுகையில், "இந்த ஏவுகணைத் தாக்குதலில் மின்சார உற்பத்தி மையத்திலிருந்த நீராவி ஜெனரேட்டர் எந்திரம் கடுமையாக சேதமடைந்தது.
மற்றொரு ஏவுகணைத் தாக்குலில் எரிபொருள் நிரப்பி வைக்கும் தொட்டி தீப்பிடித்து எரிந்தது. இதனால் ஏற்பட்ட தீ செவ்வாய்க்கிழமை காலை வரை கொழுந்து விட்டு எரிந்ததால், அதன் அருகில் தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதன் காரணமாக மின் உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் வீடுகளும் சேதமடைந்துள்ளன' எனத் தெரிவித்துள்ளார்.