
நேற்று ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 5;30 மணியளவில் ஆரம்பமாகி இரவூ 8 மணி வரை ஞானசாரர் தலைமையில் மாவத்தகம சாமபோதி விகாரைக்கு அருகாமையில் இடம்பெற்ற "காலீன தர்ம தேசனய" எனும் தொனிப்பொருளினாலான ஒன்றுகூடல் நாடு முழுதும் பாரியதொரு பரபரப்பையூம், மீண்டும் ஒரு அணர்த்தத்தை உருவாக்குமா என்ற பீதியையூம் ஏற்படுத்தி இருந்தது. ஏற்கனவே அளுத்கம பேருவலை தர்கா நகர் பிரதேசங்களில் ஏற்பட்ட அவல நிலை மீண்டும் ஏற்படக்கூடாது என்ற பிரார்த்தனை அனைத்து முஸ்லிம் உள்ளங்களிலும் உதித்திருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
அந்தவகையில் எதிர்பார்த்தவாறு எந்தவொறு அசம்பாவிதங்களும் நிகழாது இறைவன் அருளால் அமைதியான முறையில் "காலீன தர்ம தேசனய" ஒன்றுகூடல் நிறைவூற்றது. எனினும் இதன் பின்னணி என்ன என்பது அநேகமானவர்களுக்கு புரியாத புதிராகும்.
இந்த அமைதியின் பின்னணியில் பல்வேறு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. இந்த ஒன்று கூடலின் ஆரம்பம் முதலே ஏற்பாட்டாளர்களுக்கு பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தமை அநேகமான மாவத்தகமை வர்த்தகர்கள் அறிந்த விடயம்.
அதாவது, ஒரு சில அரசியல்வாதிகள் வியாபாரத்தில் வீழ்ச்சியடைந்து திணரிக்கொண்டிருக்கும் ஒரு சில வியாபாரிகள் மற்றும் கடன் தொல்லையில் சிக்கியிருக்கும் ஓரிரு வர்த்தகர்கள் என சிக்கல்களிலிருக்கும் பெரும்பாண்மை சில வர்த்தகர்கள் ஒன்று சேர்ந்து ஏற்கனவே மாவத்தகமையில் வர்த்தக சங்கமொன்று பல்லாண்டு காலமாக இயங்கி வருகையில் புதிதாக "சிங்கள வர்த்தகர்கள் சங்கம்" என்ற புதிய வர்த்தக சங்கமொன்றை நிறுவி ஏற்கனவே உள்ள வர்த்தக சங்கத்தில் பிரதிநிதித்துவம் வகிக்கும் பெரும்பாண்மை வர்த்தகர்கள் அரசியல்வாதிகளை தம்பக்கம் ஈர்த்து ஒரு பாரிய மாற்றத்தை மாவத்தக நகரினுள் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அதற்காகவேண்டி பிரதேச அரசியல்வாதிகள் வர்த்தக முக்கியஸ்தர்கள் என அநேகமானவர்களை இந்த கும்பல் தனிப்பட்டமுறையில் சந்தித்து முயற்சிகளை மேற்கொண்டபோதிலும் குருநாகல் மாவட்ட ஒரு அரசியல்வாதியை தவிர ஏனைய அனைத்து பெரும்பாண்மை அரசியல்வாதிகளும் வர்த்தகர்களும் முற்றாக இந்த புதிய வர்த்தக சங்கத்துக்கு தமது எதிர்ப்பை வெளிக்காட்டியமை முக்கியவிடமாகும்.
எனினும் பிரதேச சபை முக்கியஸ்தர் முன்னிலை வகிக்கும் இந்த புதிய சங்கத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மறைமுகமாக உதவியளிக்கின்றமையூம் குறிப்பிடத்தக்கது. எனினும் பிரதேசத்திலுள்ள இன்னுமொரு ஆளும் கட்சி மாகாண சபை உறுப்பினர் இவர்களை தகாத வார்த்தைகளால் ஏசி திருப்பியனுப்பியிருந்தமை அனைவராலும் பேசப்பட்ட விடயமாகும்.
இது இவ்வாறு தோல்வியில் முடிவடைந்த நிலையில் சுமார் 10 அல்லது 15 உறுப்பினர்களுடன் எவ்வித பண பலமும் இன்றி பெயரளவில் இயங்கிய இந்த புதிய சங்கம் திருப்புமுனையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த ஒன்றுகூடலை ஏற்பாடு செய்திருந்தனர்.
இருந்தாலும் இவர்கள் எதிர்பார்த்ததைப்போன்று பிரதேசத்தின் சகல விகாராதிபதிகளாலும் இவர்கள் எதிர்பார்த்த வரவேற்பு இவர்களுக்கு கிடைக்கவில்லை என்பது இவர்கள் எதிர்பாராத பாரிய இழப்பாகும்.
எனினும் ஆரம்பித்ததை எவ்வாறாவது முடிக்க வேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொரு விகாராதிபதிகளையூம் தனிப்பட்ட முறையில் வெகுமதிகளுடன் சந்திக்கச் சென்றாலும் இவர்கள் எதிர்பார்த்தது இடம்பெறவில்லை அதனால், குறைந்தது மக்களையாவது ஒன்று திரட்டவேண்டும் என்ற நோக்கில் போஸ்டர்கள் பெனர்கள் என பாரிய பிரச்சார நடவடிக்கைகளையூம் சுமார் ஒரு வார காலத்துக்கு முதலே ஆரம்பித்தனர்.
இது இவ்வாறு நடந்தகொண்டிருக்கையில், இதையறிந்த பழைய வர்த்தக சங்கத்தினர் ஒன்றுகூடி இது பற்றி கலந்தாலோசிக்கலானர். அதன் பிறகாரம் யாரும் எக்காரணத்தைக்கொண்டும் இவ்வொன்றுகூடலுக்கு பணத்தாலோ உடலாலோ உதவி புரிவதில்லை என்றும் தமது மார்க்கத்தைவிடவூம் முஸ்லிம் சகோதரர்களுடனான தமது அந்நியோன்ய சகோதரத்துவம் முக்கியம் என்பதை வலியூறுத்தியதுடன் ஒரு சில பிரதேச விகாராதிகதிகளையூம் சந்தித்து அவர்களது ஆசிர்வாதத்தையூம் பெற்றது மட்டுமன்றி, என்ன நடந்தாலும் முஸ்லிம்களது உடமைக்ளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதை உயிர் தியாகம் செய்தாயினும் தடுக்க வேண்டும். என்ற முடிவூக்கு வந்திருந்தனர்.
இவ்விடயத்தை அறிந்த புதிய கும்பல் செய்வதறியாது திணரிக்கொண்டிருக்கையில் ஒரு வாகன வர்த்தகரின் அனுசரணை இவர்களுக்கு கிடைத்தது. அதன் பின்னர் இவரது அனுசரணையில் பாரியளவில் ஏற்பாடுகளை மேற்கொண்டனர். எனினும் ஆரம்பகட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ளும்போதே இக்கும்பலுக்கு தோல்வியின் அத்திவாரம் தென்படத்தொடங்கியது என்றுதான கூற வேண்டும்.
ஏனெனில், வெள்ளிக்கிழமை இரவூ அலங்கார வேளைகளை தனியே அந்த பிக்குகளுக்கு மட்டுமே செய்ய வெண்டியேற்பட்டமை மிகவூம் கவலைக்குரிய விடயமாகும்.
அன்றிரவூ அலங்கார வேலைகள் மந்தகதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும்போது வெளியிலிருந்து இந்த வேளைகளுக்காக வருகை தந்திருந்த ஒரு பிக்கு பெரும்பாண்மை சகோதரர் ஒருவரின் கடைக்குச் சென்று "இங்கு பௌத்தர்கள் இல்லவே இல்லையா?" என்று கேட்குமளவூக்கு நிலமை சென்றிருக்கின்றது.
அதுமட்டுமன்றி போயகொடை விகாராதிபதி மற்றும் இலுகேவல விகாராதிபதி ஆகியோர் குறித்த பிரதேசவாசிகள் அந்த ஒன்றுகூடலுக்கு எக்காரணத்தைக்கொண்டும் செல்லக்கூடாது என தடைவிதித்ததாகவூம் குறித்த பிரதேச பெரும்பாண்மை சகோதரர்கள் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறிருக்க நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை முதலே பொலிசார் சுமார் 4 பஸ்களில் மாவத்தகம பறகஹதெனிய தல்கஸ்பிட்டிய போன்ற பிரதேசங்களில் பாதுகாப்பு நடவடிக்கைளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அத்துடன் தியனைப்பு வண்டி, அம்புயிலன்ஸ் வண்டி என பாதுகாப்புக்காகவூம் கலகத்தை அடங்குவதற்காகவூம் பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளபட்டிருந்தன.
இதற்கிடையில் மாத்தறை என்ற பதாகை ஏந்திய 2 பஸ் வண்டிகள் மக்குலான விகாரையில் தரித்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. எமது ஒரு சில பிரதிநிதிகள் அங்கு அனுப்பப்பட்டு விசாரித்த நிலையில் உண்மையிலே இரண்டு பஸ் வண்டிகளில் பிக்குமார் மற்றும் சில இளைஞர்கள் தருவிக்கப்பட்டிருந்தனர்.
ஞாயிற்றுக் கிழமை மாலை சுமார் 5.30 மணியாகியூம் சுமார் 200 பேருக்கும் குறைவாகவே அங்கு ஒன்றுகூடினர். அதிலும் சிறுவர்கள் மற்றும் பெண்களே அதிகமாக இருந்தனர். அதற்கு அடுத்தபடியாக பாதுகாப்புப் பணிகளில் இருந்த பொலிசாரே கண்ணுக்தெரிபடுமளவூக்கு அதிகமாக இருந்தனர்.
இது இவ்வாறு தோல்வியின்பால் சென்றுகொணடிருக்க சுமார் 6:00 மனியளவில் ஞானசாரர் வருகைதந்ததுடன் குறிப்பிடத்தக்களவூ மக்கள் ஒன்றுகூடினர் (சுமார் 400-500 பேரளவில் நாமும் 10 பேரளவில்; அந்தக் கும்பலுக்குள் கதை கேற்பதற்காக அனுப்பியிருந்தோம்). அதில் அதிகமானோர் அவரது பேச்சை கேற்பதற்காகவே வந்திருந்தார்கள் என்பது வந்திருந்தவர்களின் கதையிலிருந்து தெரியவந்தது.
ஏற்கனவே பறகஹதெனியவூடன் கோபத்துடன் இருந்த ஞானசாரர் தமது உரையின்போது கூடியிருந்தவர்களை பார்த்ததும் மிகவூம் கவலயடைந்த முகத்துடன் எங்கே எமது இளைய சமுதாயத்தினர் என்று ஆரம்பித்திலேயே வினவியதாக அருகிலிருந்தவர்கள் தெரிவித்தனர்.
உண்மையிலேயே பாரியதொரு திட்டத்துடன் வருகை தந்த ஞானசாரருக்கு வந்திருந்த சிறிய தொகையினர் ஏமாற்றத்தை அளித்தமை அவரது உரைநடையிலிருந்து தெரியவந்தது. சுமார் 40 நிமிடங்கள் உரை நிகழ்த்திய அவர் பறகஹதெனிய பற்றியூம் தௌஹீத் ஜமாஅத் பற்றியூம் சுட்டிக்காட்டியதுடன் இவர்களது ஒற்றுமையூம் ஒத்துழைப்பும் எம்மத்தியில் உருவாக வேண்டும் என தெரிவித்தமை அவரது எதிர்பார்ப்பின் தோல்வியை இன்னும் உறுதிப்படுத்தியது.
உண்மையிலே இந்த தோல்வியில் எமது மாவத்தகம பழைய வர்த்தக சங்கத்தினர் மத்தியிலிருக்கும் புரிந்துணர்வூ மற்றும் ஒற்றுமை முக்கிய பங்குவகிக்கின்றது. அத்துடன் மாவத்தகம மற்றும் அண்மித்த பிரதேச மக்கள் முஸ்லிம்களுடன் கொண்டுள்ள சகோதரத்துவம் பரஸ்பர புரிந்துணர்வூடனான நடவடிக்கைகள் என்பனவூம் குறைந்த மக்கள் திரள்வூக்கும் காரணமாக அமைந்திருக்கின்றது. அத்துடன் ஞானசாரருக்கும் பொதுபல சேனாவூக்கும் பல்வேறு தரப்பினர்களால் சர்வதேச ரீதியிலும்கூட அச்சுறுத்தல்கள் தடங்கல்கள் வந்துகொண்டிருக்கின்றமையூம் இவ் அமைதிக்கு ஒரு காரணமாக அமைந்திருக்கலாம்.
எது எவ்வாறிருப்பினும் நிச்சயமாக எமது முஸ்லிம் சகோதரர்கள் பெரும்பாண்மை மற்றும் ஏனையவர்களுடன் உள்ள அந்நியோன்ய உறவை மென்மேலும் அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்பது இந்த சம்பவத்திலிருந்து உறுதியாகின்றது. குறுகிய ஒரு சில கும்பலின் அடாவடித் தனத்துக்காக நல்ல மனது படைத்த பெரும்பாண்மை மக்களை நாம் வெறுக்காது எமது நற்பண்புகளை அவர்களிடத்தில் காட்டி அவர்களுடனான உறவை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது கட்டாயமான விடயமாகும்.
இதன் பிறகும் அசம்பாவிதங்கள் ஏற்படாமலிருப்பது நிச்சயமாக எமது நடவடிக்கைகளிலேயே தங்கியூள்ளது.