Jul 18, 2014
20ஆம் திகதி மாவத்தகமவில் இடம்பெறவுள்ள BBS ஒன்று கூடல்
Posted by AliffAlerts on 23:03 in NL NP | Comments : 0
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5.30 மணியளவில் மாவத்தகம சம்போதி விகாரையின் அருகில் பொது பல சேனாவின் செயலாளர் ஞானசாரர் தலைமையில் காலீன தர்மதேஷனாவ எனும் தலைப்பிலான ஒன்றுகூடலுக்கான ஏற்பாடுகளை மாவத்தகமவில் புதிதாக உருவாக்கப்பட்ட சிங்கள வரத்தகர்கள் சங்கம் (ஓரிரு விசமிகளை மட்டும் உள்ளடக்கியது) மேற்கொண்டுள்ளது.
சுமார் 60 வீதமான முஸ்லிம் வர்த்தகர்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை இங்கு பெரும்பாண்மையினருடன் மிகவும் சுமுகமான முறையில் மிகவும் ஒற்றுமையுடன் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும் மிகவும் குறுகிய 15க்கும் குறைவான அங்கத்தவர்களைக்கொண்ட புதிய சிங்கள வர்த்தக சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ் ஒன்றுகூடலுக்கு ஏற்கனவே நீண்ட காலமாக இருந்து வரும் மாவத்தகம வர்த்தகர்கள் (சிங்கள முஸ்லிம் தமிழ் வர்த்தகர்களை உள்ளடக்கியது) சங்கம் எவ்வித ஒத்துழைப்பையும் வழங்காமை முக்கிய அம்சமாகும்.
ஏற்கனவே அழுத்கமவில் நடந்த திட்டமிட்ட சம்பவத்தின்போது எமது அடுத்த நடவடிக்கை குருநாகல் மற்றும் பதுள்ளை ஆகிய இடங்களில் என குறிப்பிட்ட நிலையில் ஞாயிற்றுக் கிழமை இடம்பெறவுள்ள கூட்டத்துக்கும் பறகஹதெனியவுக்கும் ஏதேனும் தொடர்புகள் ஏற்படுத்தப்படுமா? (ஏற்கனவே பறகஹதெனிய பள்ளிவாயலின் அமைதிப் பதாகை சமபந்தமாக பொதுபலசேனா பல்வேறு இடங்களில் உரையாற்றி இருந்ததுடன் அதற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுப்ட்டு கடந்த மார்ச் 19ஆம் திகதி தீ மூட்டியமையும் குறிப்பிடத்தக்கது.) அல்லது மாவத்தகம நகரிலுள்ள முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களுக்கு காடையர்களின் கண்ணோட்டம் செல்லுமா? என்ற சந்தேகம் நிலவி வருகின்றது. அத்துடன் இன்று வெள்ளிக்கிழமை ஞாயிற்றுக்கிழமைக்குரிய ஏற்பாடுகள் இடம்பெறுவதை காணக்கூடியதாக இருந்தது. எனினும் அவ்வேற்பாடுகளை சிறுவர்களைப் பயன்படுத்தி தேரர்கள் மேற்கொண்டதுடன் எவருமே உதவிக்கு சென்றிராத நிலையையும் காணக்கூடியதாக இருந்தமை முக்கிய விடயமாகும்.
எது எவ்வாறிருப்பினும் மாவத்தகம வர்த்தகர்கள் சங்கத்தின் பெரும்பாண்மை இன சகோதரர்களின் கருத்துப்படி அவர்களது உயிரைக் கொடுத்தாயினும் பிரச்சினை ஏற்படாது தடுப்போம். எமக்கு எமது ஒற்றுமையும் எமது சகோதரத்துவமும் தமது மார்க்கத்தையும் மதத்தையும்விட முக்கியமானது என உறுதியாக கூறுவது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். எனினும் ஒரு சில காடையர்களின் விஷமத்தனமான செயற்பாடுகள் எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உறுதியாக தெரிவிக்க முடியாத நிலையில் இன்றைய எமது பறகஹதெனிய பள்ளிவாயல்களில் ஜும்ஆத் தொழுகையின் பின்னரான வழியுறுத்தல் பொறுமை மற்றும் விளையாட்டுத்தனமான செயற்பாடுகளை முற்றாக தவிர்த்தல் சம்பந்தமாக வழியுறுத்திக் கூறப்பட்டமை எமது சகோதரர்களின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் என்று நம்புகின்றோம்.
அத்துடன் ஞாயிற்றுக் கிழமை வாராந்த சந்தை இடம்பெறும் தினம் என்பதால் சகோதரிகள் சந்தைக்குச் செல்வதை முற்றாக தவிர்த்துக் கொள்ளும்படி ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதுடன் வழமைபோல் எமது சகோதரர்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் மாவத்தகம வரத்தக சங்கத்தின் பெரும்பாண்மை இன சகோதரர்கள் அறிவுரை வழங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
எதிர்பார்ப்பதைப் போன்று எவ்வித அடாவடித்தனங்களும் ஏற்படாது என்பதே அநேகமானவர்களது கருத்தாகும். ஏனெனில் ஜனாதிபதித் தேர்தல் காலங்குறிக்கப்படுகின்ற காலகட்டத்தில் அரசியல் லாபம் காணும் பெரியவர்கள் இவ்வாறான அனர்த்தங்களுக்கு மீண்டும் வழிகோர மாட்டார்கள் என அனுபவசாலிகள் தெரிவிக்கின்றனர். எப்படியிருந்தாலும் றமழானில் இறுதிப் பத்திலிருக்கும் நாம் பொறுமையுடனும் பிரார்த்தனைகளுடனும் இருப்பதன் மூலம் சிக்கல்களை வெகுவளவில் குறைத்துக்கொள்ளத்தக்கதாக இருக்கும்.
இறுதி முடிவு இறைவனின் சிறந்த முடிவாக அமையும்.