லண்டன்: லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது. புதிய வரலாறு படைத்துள்ள இந்த வெற்றிக்கு வேகப் பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா முக்கியப் பங்கு வகித்துள்ளார்.
அபாரமாக பந்து வீசிய அவர் 2வது இன்னிங்ஸில் 7 விக்கெட்களைச் சாய்த்து இங்கிலாந்தை நிலை குலைய வைத்து விட்டார். இப்போட்டியில் 95 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா இங்கிலாந்தை வீழ்த்தி, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற முன்னிலையைப் பெற்றது.
கடைசியாக லார்ட்ஸ் மைதானத்தில் 28 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1986ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருந்தது.
அப்போது, தற்போதைய இந்திய அணியின் 10 வீரர்கள் பிறந்திருக்கக் கூட இல்லை என்பது சுவாரஸ்யமானது. கிட்டத்தட்ட 3வது தலைமுறை இந்திய வீரர்கள்தான் மீண்டும் ஒரு வெற்றியை லார்ட்ஸ் மைதானத்தில் சுவைத்துள்ளனர்.
மேலும் 2011ம் ஆண்டுக்குப் பிறகு அந்நிய மண்ணில் இந்தியா வென்றுள்ள முதல் டெஸ்ட் வெற்றியும் இதுவேயாகும்.
வழக்கமாக லார்ட்ஸ் மைதானத்தில் வெளிநாட்டு அணிகள் நிறையவே திணறும். ஆனால் இளம் இந்திய வீரர்கள் அதை தவிடுபொடியாக்கி சாதித்து விட்டனர்.
இந்தியாவின் இந்த வெற்றிக்கு 7 விக்கெட் வீழ்த்திய இஷாந்த் சர்மா, 2வது இன்னிங்ஸில் 68 ரன்களைக் குவித்து, 3 விக்கெட்களைச் சாய்த்த ஜடேஜா, 52 ரன்கள் குவித்து, 6 விக்கெட்களையும் சாய்த்த புவனேஸ் குமார் ஆகியோர்தான் முக்கியக் காரணம். அதேபோல 95 ரன்கள் குவித்த முரளி விஜய்யும் பாராட்டுக்குரியவர்.
கடைசி நாளில் இங்கிலாந்து 6 விக்கெட்களைக் கையில் வைத்திருந்தது 214 ரன்களை எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் இஷாந்த் சர்மா அந்தக் கனவைக் கலைத்து விட்டார்.