நியூயார்க்: பாலஸ்தீனத்தின் காஸா மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமெரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி எகிப்து விரைந்துள்ளார்.
காஸா மீது கடந்த இருவார காலமாக இஸ்ரேல் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் பெரும் போரினால் 500க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சுமார் 3 ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த போரை முடிவுக்கு கொண்டுவர ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் அறிவுறுத்தலின் பேரில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, இந்த விவகாரம் தொடர்பாக பேச எகிப்து விரைந்துள்ளார்.
முன்னதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யுவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய அவர், "காஸாவில் ராணுவ நடவடிக்கை விரிவுபடுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும். 2012 ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் இருதரப்பினரும் விரைவில் மேற்கொள்ள வேண்டும்.
இதற்கு ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் ஒப்புக்கொள்ளும் வகையில் எகிப்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து துணை நிற்கும்'' என்று அவர் கூறியதாக அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே எகிப்து முன்னெடுத்த சமாதான முயற்சிகளை ஹமாஸ் இயக்கம் நிராகரித்திருந்த நிலையில் அமெரிக்கா இப்போது களம் இறங்கியுள்ளது. விரைவில் அங்கு போர் நிறுத்தத்துக்கு வழி ஏற்படும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.