BREAKING NEWS

Jul 21, 2014

பேய்க் கதைகள்’ சொல்லி லண்டன் HOTELலில் தங்க மறுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!



லண்டன்: தீய சக்திகள் அதாவது பேய்கள் இருப்பதாகக் கூறி, லண்டனில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்களது அறைகளை மாற்றித் தரச் சொல்லி சில இங்கிலாந்து வீரர்கள் கோரிக்கை விடுத்திருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

லண்டனில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல் லங்கம். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து வீரர்கள் சிலர் தங்களது காதலியுடனும், சிலர் தங்களது மனைவியுடனும் லங்கம் ஹோட்டலில் தங்கியுள்ளனர்.

ஆனால், தாங்கள் தங்கியுள்ள ஹோட்டல் அறைகளில் பேய் இருப்பதாகவும், அதனால் தங்களது மனைவி மற்றும் காதலிகள் பயப்படுவதாகவும் குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளனர் சில வீரர்கள். மேலும் உடனடியாக தங்களது அறைகளை மாற்றித் தரும்படியும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக இங்கிலாந்து அணியைச் சேர்ந்த் பிரபல பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் கூறுகையில், ‘இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது நான் அந்த அறையில் தான் தங்கினேன். ஒரு நாள் இரவு, மிகவும் வெப்பமாக இருந்ததால் நான் உறங்காமல் படுக்கையில் படுத்திருந்தேன்.

அப்போது திடீரென பாத்ரூமில் குழாய் திறந்து நீர் தானாக கொட்டும் ஓசை கேட்டது. நான் எழுந்து விளக்கைப் போட்டவுடன் குழாய் தானாக நீர் நின்று விட்டது.

பின், மீண்டும் விளக்கை அணைத்தவுடன் மீண்டும் பாத்ரூமில் அனைத்து குழாய்களில் இருந்தும் நீர் வெளியேறும் ஓசை கேட்டது. நான் மீண்டும் விளக்கைப் போட்டதும் ஓசை நின்று விட்டது. இப்படியாக மாறி மாறி நடந்து கொண்டிருந்தது. இச்சம்பவம் மாயாஜாலம் போலிருந்தது' என தன் திகில் அனுபவத்தை விவரித்துள்ளார்.

மேலும், மறுநாள் இது குறித்து தனது அணியின் சகவீரர்களிடம் பிராட் கூறியபோது அவர்களுக்கும் அதே போன்ற அனுபவம் கிடைத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனபோதும், இம்முறை பிராட் அதே ஹோட்டலில் சமாளித்துக் கொண்டு தங்கி வருவதாகக் கூறியுள்ளார்.

பிராடின் காதலி பீலி மிகவும் பயந்து போய் விட்டாராம் இந்த நிகழ்வுகளைப் பார்த்து. அதேபோல மொயீன் அலியின் மனைவியும் கூட பயந்து போய்க் காணப்பட்டாராம். இந்த அறையில் தங்கவே முடியாது என்றும் கூறி விட்டாராம்.

இதேபோல பென்ஹோக்ஸ் கூறுகையில், நான் 3வது மாடியில் இருந்தேன். நிச்சயம் எதுவோ நடக்கிறது. அதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ஒரு நாள் நள்ளிரவில் அறைக்குள் யாரோ நடமாடுவது போல இருந்தது. மிகவும் வித்தியாசமாக இருந்தது அது என்றார்.

1865ம் ஆண்டு இந்த லங்கம் ஹோட்டல் திறக்கப்பட்டது. மார்க் டுவென், ஆஸ்கர் ஒயில்ட், ஆர்த்தர் கானன்டோயில் போன்ற மாபெரும் இலக்கிய பிதாமகன்கள் இங்கு தங்கியிருந்து பெருமைப்படுத்தியுள்ளனர்.

அதேசமயம், இந்த ஹோட்டலில் பேய் நடமாட்டம் இருப்பதாக நீண்ட காலமாகவே ஒரு பேச்சு உள்ளது. அதிலும் அறை எண் 333தான் பெரும் பீதிக்குரிய அறையாக பார்க்கப்படுகிறது.

இதை அந்த ஹோட்டலின் இணையதளமே கூறியுள்ளது. 1973மா் ஆண்டு பிபிசி ரேடியோவில் பணியாற்றிய ஜேம்ஸ் அலெக்சாண்டர் கோர்டன் என்பவர் இங்கு தங்கியிருந்தார். அப்போது நள்ளிரவில் அவரது அறையில் ஒளிரும் பந்து ஒன்று தெரிந்துள்ளது.

அது பின்னர் மனித உருவமாக மாறி மாலை நேர உடையில் காணப்பட்டதாம். அதைப் பார்த்த கோர்டன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அந்த உருவம் அவருக்கு அருகே வந்ததாம். அப்போது அதன் கால்கள் இல்லையாம்.

ஒரு வேளை இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் தோற்றால் அதற்குப் பேய்தான் காரணம் என்று சொல்லித் தப்ப திட்டமிடுகிறார்களா இங்கிலாந்து வீரர்கள்!

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &