BREAKING NEWS

Jun 22, 2013

குர்ஆனின் காட்சிகளை விவரிக்கும் பூங்கா

துபாய் அரசு தனது நீண்ட நாள் லட்சியமான குரானின் காட்சிகளை விவரிக்கும் பூங்கா ஒன்றினை அமைக்கும் எண்ணத்தைச் செயல்படுத்தத் துவங்கியுள்ளது. 7.3 மில்லியன் டாலர் திட்ட மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்படும் இந்தப் பூங்காவில் உள்ள தோட்டத்தில், குரானில் கூறப்பட்டிருக்கும் இயற்கைத் தாவரங்கள் அனைத்தும் வளர்க்கப்படும்.

அத்தோட்டத்தின் நடுவே, குளிர்சாதன வசதிகள் பொருத்தப்பட்ட குகைப்பாதை ஒன்று அமைக்கப்படும் அதன் இருபுறங்களிலும் குரானின் காட்சிகள் ஒளி, ஒலி விளக்கங்களுடன் சித்தரிக்கப்பட்டு இருக்கும்.

இத்திட்டத்திற்கான நிர்வாக இயக்குனர் முகமது நூர் மஷ்ரூம், இந்தப் பூங்கா வரும் 2014ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும் என்று நேற்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மேற்கத்திய நாடுகளின் சுற்றுலா முறைகளைப் பின்பற்றிய விதத்தில் அமையவிருக்கும் இந்தப் பூங்காவிற்கு ஏராளமான முஸ்லிம் மக்களும் வருவார்கள் என்பது அரசின் எண்ணமாக இருக்கின்றது. ஆயினும், இதனை எதிர்ப்பவர்களும் இருக்கின்றனர்.

இந்த வாரமே, சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஊழியர் ஒருவர், அவர்கள் நாட்டு பெண்கள் துபாய்க்கு செல்வது பாவமான செயலாகும் என்ற கண்டனம் ஒன்றை எழுப்பினார். அதற்கு பலமான ஆட்சேபங்கள் எழுந்ததால், இந்தக் கண்டனம் பின்னர் அவரால் திரும்பப் பெறப்பட்டது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &