BREAKING NEWS

Jun 21, 2013

ஞானசார தேரர் காலால் உதைத்தார்: கத்தோலிக்க போதகர்

இலங்கையில் கத்தோலிக்க வழிபாட்டிடம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பொதுபல சேனை அமைப்பின் தலைவர் ஞானசார தேரர் உட்பட 13 பேர் மீது கொழும்பு மேல்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டது.

2008 ஜூன் மாதம் 7ஆம் தேதி கொழும்பு மாவட்டத்தில் உள்ள தலாஹேனவில் கல்வாரி என்ற கத்தோலிக்க வழிபாட்டிடத்தில் தாக்குதல் நடத்தி, தங்க மாலை ஒன்றையும் கைத்தொலைபேசி ஒன்றையும் கொள்ளையடித்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

ஞானசார தேரர் உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தனர்.

விசாரணையின்போது கல்வாரி கத்தோலிக்க வழிபாட்டிடத்தின் போதகர் சாட்சியமளிக்கையில், வழிபாட்டு நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று தன்னை மிரட்டி வந்த ஞானசார தேரர் தலைமையிலான கும்பல் ஒன்று வழிபாட்டிடத்தைத் தாக்கியதாகக் கூறினார்.

அச்சமயம் ஞானசார தேரர் தன்னை காலால் உதைத்து தாக்கியதாக அவர் குற்றம்சாட்டினார்.

அடுத்த கட்ட விசாரணை ஜூலை 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

விசாரணைக்குப் பின் கருத்து வெளியிட்ட ஞானசார தேரர், பலவந்தமான கிறிஸ்தவ மதமாற்றங்களுக்கு எதிரான தனது போராட்டம் தொடரும் என சூளுரைத்துள்ளார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &