ஆறாவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் ஆகியோர் ஸ்பொட்-பிக்சிங்கில் ஈடுபட்டு டில்லி பொலிசிடம் பிடிபட்டனர்.
பொலிஸ் காவலில் இருந்த ஸ்ரீசாந்த், சண்டிலா, சவான் ஆகியோர் கொடுத்த தகவலின் படி, பலர் கைதாகி வருகின்றனர்.
இதில், கைதான புக்கி ரமேஷ் வியாஸ் கொடுத்த தகவலை அடுத்து மறைந்த மல்யுத்த வீரர், நடிகர் தாராசிங்கின் மகன், நடிகர் வின்டூ ரந்த்வா (வயது 49) மும்பை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் மீது, ஏமாற்றுதல், மோசடியான ஆதாரங்கள் தயாரித்தல் என்று பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வின்டூவை நாளை 24ஆம் திகதி வரை காவலில் வைக்க நீதிபதி அனுமதித்தார்.
இந்நிலையில், வின்டு சென்னை அணியின் உரிமையாளரின் உறவினரை தொடர்பு கொண்டு பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, ஸ்பொட் பிக்சிங் விவகாரத்தில் சென்னைக்கு உள்ள தொடர்பு குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வின்டு சென்னையில் நடைபெறும் போட்டிகளில் சென்னை அணிக்கான வி.ஐ.பி.,களுக்கான வரிசையில் டோனியின் மனைவி சாக்ஷி அருகில் அமர்ந்திருந்தார்.
அவருக்கு எவ்வாறு அந்த இடம் கிடைத்தது என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வின்டு சென்னை தொலைபசி எண்ணுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டுள்ளார்.
இந்த எண்ணுக்கு வின்டு கடந்த 6 மாதத்தில் தான் தொடர்பு கொண்டார். இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிரிக்கெட் சூதாட்டத்தில் மேலும் சில பொலிவுட் நடிகர்களுக்கு தொடர்பு உள்ளதாக வின்டூ, பொலிசாரிடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து பொலிசார் அவர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இவர் சல்மான்கான் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் பரிசை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.