கடந்த 1979ம் ஆண்டு முதல் ஈரான் நாட்டில் குடும்ப கட்டுப்பாட்டு திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் நாட்டின் மக்கள் தொகை வெகுவாக குறைந்துள்ளது. தற்போது 7 கோடியே 50 லட்சம் மக்கள்தான் ஈரானில் உள்ளனர்.
மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் மேலை நாடுகளுக்கு இணையாக போட்டியிட முடியாத சூழ்நிலை உருவாகும் என்று ஈரான் அதிபர் மகமூத் அகமதினிஜாத் கூறியுள்ளார். இதனால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து புதிய திட்டம் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
தற்போது உள்ள 7 கோடியே 50 லட்சம் மக்கள் தொகையை 15 முதல் 20 கோடியாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக ஈரானில் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை ரத்து செய்யும்படி ஈரான் தலைவர் அயதுல்லா அலி கொமேனியும் உத்தரவிட்டுள்ளார்.
தலைவரின் உத்தரவை அடுத்து ஈரானில் மக்கள் தொகை பெருக்கத்துக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுகாதாரத் துறை அமைச்சகம் 1 கோடியே 50 லட்சம் அதிகாரிகளை பணி நியமனம் செய்துள்ளது.
அந்த அதிகாரிகள் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். திருமணமான இளம் தம்பதிகளை சந்திக்கும் அவர்கள், குழந்தைப் பிறப்பை தள்ளிப் போடாமல் அதிக அளவில் குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர்.
உறவின் போது கருத்தடை சாதனங்களை பயன்படுத்த வேண்டாம் என அறிவுரை கூறும் அவர்கள், ஒரு குழந்தையுடன் நிறுத்தாமல் அடுத்தடுத்து குழந்தை பெற்றுக்கொள்ளுங்களேன் என்றும் கூறுகின்றனர்.
ஒரு சிலர் வறுமை காரணமாக குழந்தைப் பிறப்பை தள்ளிப் போட வாய்ப்புள்ளது. எனவே புதிதாக பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 600 பவுண்ட் அளவிற்கான பணத்தை டெபாசிட் செய்யும் திட்டத்தை 3 ஆண்டுகளுக்கு முன்பே ஈரான் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம். அந்த குழந்தையில் 18 வயது வரை ஆண்டுதோறும் 60 பவுண்ட் பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்படும். இதன் மூலம் மக்களை குழந்தை பெற்றுக் கொள்ள ஊக்கப்படுத்த முடியும் என்பது ஈரான் அரசின் திட்டம்.