இந்த நிலநடுக்கம் 7.8 ரிக்டர் அளவு பதிவாகியுள்ளதாக அமெரிக்க நிலப்பொதியியல் அளவீடு நிறுவனம் (US Geological Survey) தெரிவித்துள்ளது. இது ஈரான் பாகிஸ்தான் எல்லை பகுதியல் ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்க நிலப்பொதியியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலநடுக்கத்தால் இதுவரை நாப்பது பேர் மரணமடைந்துள்ளதாக ஈரானிய தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
நாப்பது வருடங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவே மிகப்பெரியது என ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தால் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஐந்து பேர் மரணமடைந்துள்ளதாக அல் ஜசீரா செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
டெல்லி, குஜராத், சண்டீகர் குலுங்கியது…
இந்தியாவில் இந்த நிலநடுக்கம் டெல்லி, குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, ஜம்மு-காஷ்மீர், உத்தரப் பிரதேசம், சண்டீகர் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் உணரப்பட்டது. இங்கு வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.
கராச்சி, ராவல்பிண்டி, குவெட்டா, இஸ்லாமாபாத்…
அதே போல பாகிஸ்தானின் கராச்சி, ராவல்பிண்டி, குவெட்டா, இஸ்லாமாபாத், ஹைதராபாத் ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. அதே போல ஆப்கானிஸ்தானின் காண்டஹார் பகுதியும் இந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்தது.
துபாய், ஷார்ஜா, அஜ்மான்…
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் வளைகுடா நாடுகளிலும் உணரப்பட்டது. துபாய், ஷார்ஜா, அஜ்மான் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் மக்கள் தங்கள் கட்டிடத்தை விட்டு தெருக்களில் காத்திருந்தனர்.
அரைமணி நேரம் கழித்து தங்களது இருப்பிடங்களுக்கு திரும்பினர்.
பஹ்ரைன், கத்தாரிலும்…
அதே போல பஹ்ரைனிலும் கத்தாரிலும் நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்தன. இதையடுத்து அபுதாபி உள்ளிட்ட பகுதிகளில் உயரமான கட்டடங்களில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலநடுக்கம் தெற்கு ஈரான்-பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண எல்லையில் கஷ் என்ற பகுிதியில் மையம் கொண்டிருந்தது. நிலத்துக்கு அடியில் 15.2 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 9ம் தேதி தான் ஈரானை 6.1 ரிக்டர் புள்ளிகள் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதும் அதில் 37 பேர் பலியானதும் நினைவுகூறத்தக்கது.
நிலநடுக்கத்தின் தாக்கத்தை விவரிக்கும் படம்:
கீழே உள்ள படம் அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள படமாகும். இதில் நிலநடுக்கத்தின் தாக்கத்தின் அளவு விவரிக்கப்பட்டுள்ளது.