BREAKING NEWS

Jan 6, 2013

பௌத்த பிக்குகள் தலைமையில் ஆர்ப்பாட்டம்

அநுராதபுரத்தில் மல்வத்தை ஓயா என்னும் இடத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றையும், அங்கு வாழும் முஸ்லிம் குடும்பங்களையும் அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று பௌத்த பிக்குகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

சுமார் 300 பேர் வரையிலானோர் அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பள்ளிவாசம் கடந்த ஹஜ்ஜுப் பெருநாளின்போது எரிக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அங்கு அமைந்திருக்கும் பள்ளிவாசல் மற்றும் மதரசா ஆகியவற்றை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்றும் அங்கு வாழ்ந்து வருகின்ற சுமார் 42 முஸ்லிம் குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

அந்தப் பகுதி பௌத்த புனித பிரதேசத்துக்குள் வருவதாகக் கூறியே அங்கு வேறு மதங்களுக்கு இடம்கிடையாது என்று அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.

வெளியூர்களைச் சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்களே இந்தப் போராட்டத்தில் பெரிதும் கலந்துகொண்டதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

பொலிஸார் தலையிட்டதை அடுத்து அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடப்பது தடுக்கப்பட்டதாகவும் செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

அதேவேளை, அங்கு வந்த அந்த பிரதேசத்துக்கான துணை அரசாங்க அதிபர், 3 மாத காலத்துக்குள் அந்த முஸ்லிம் மக்களையும், பள்ளிவாசலையும் அங்கிருந்து அகற்றுவதாக வழங்கிய உறுதிமொழியை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றதாக செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

இந்தப் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் மக்கள் குறித்து அரசின் உயர் மட்டத்தினருடன் முஸ்லிம் சமூகத்தலைமைகள் பேசுவதற்காக இருந்த தருணத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவரான எம்.எம். அமீன் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் புனிதப் பிரதேசம் என்று காரணம் கூறப்பட்டு அநுராதபுரத்தில் வேறு இடத்தில் இருந்த முஸ்லிம்கள் அகற்றப்பட்டதாகவும் அவர் வருத்தம் வெளியிட்டார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &