பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சியை எதிர்வரும் 27ம் திகதி வியாழக்கிழமை ஆரம்பிப்பதாக உயர் கல்வியமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிக்கென உயர் கல்வியமைச்சு 200 மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.
2011ம் ஆண்டில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுள் 27 ஆயிரம் பேர் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கென மூன்று கட்டங்களாக தலைமைத்துவப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இதன்படி முதல் கட்டமாகவே டிசம்பர் 27ம் திகதியன்றே தலைமைத்துவப் பயிற்சிகள் ஆரம்பிக்கப்படுகின்றன. ஜனவரி 12ம் திகதிவரை நடைபெறும் இப்பயிற்சிகளுக்கென முதல் கட்டமாக 10 ஆயிரம் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் கல்வி பயிலவுள்ள துறைகளின் அடிப்படையிலேயே கட்டம் கட்டமாக பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதுடன் இதில் அனைத்து மொழிகளிலும் கல்வியைத் தொடரவுள்ள மாணவர்களும் கலந்து கொள்வரெனவும் அவர் கூறினார்.
மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிகளை வழங்குவதற்கென இலங்கை, திருகோணமலை, யாழ்ப்பாணம், அநுராதபுரம், தியத்தலாவை, களுத்துறை, காலி உள்ளிட்ட பல பிரதேசங்களில் 22 முகாம்கள் நிறுவப்பட்டுள்ளன. இங்கு மாணவர்களுக்கு தேவையான விரிவுரைகளும் பயிற்சிகளும் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டப் பயிற்சிகள் ஜனவரி 15 முதல் பெப்ரவரி முதலாம் திகதி வரையிலும் மூன்றாம் கட்டப் பயிற்சிகள் பெப்ரவரி 12 முதல் பெப்ரவரி 28 வரை நடைபெறுமெனவும் அவர் கூறினார்.