BREAKING NEWS

Dec 1, 2012

முஸ்லிம்கள் எவற்றுக்கும் பயப்படத் தேவையில்லை: பஷில்


அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்குமிடையிலான முக்கிய சந்திப்பொன்று நேற்று வெள்ளிக்கிழமை இரவு சிரேஷ்ட அமைச்சர் பௌஸியின் வீட்டில் நடைபெற்றுள்ளது.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை, முஸ்லிம் கவுன்சில் மற்றும் முஸ்லிம் எம்.பி.க்கள் கலந்துகொண்டுள்ள இம்முக்கிய கூட்டத்தில் முஸ்லிம் சமூகம் எதிகோண்டிருக்கும் அண்மைக்கால சவால்கள் குறித்து அமைச்சர் பஷில் ராஜபக்ஷவிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கு பதில் வழங்கியுள்ள அமைச்சர் பஷில் ராஜபக்ஷ,

முஸ்லிம்கள் எவற்றுக்கும் அச்சப்படத் தேவையில்லை. நாட்டில் சிலர் தம்மை பெரியவர்களாக இனங்காட்டிக்கொள்வதற்காக சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர். அவ்வாறான ஒரு செயற்பாடே ஹலால் சான்றிதழ் ரத்துச் செய்ய வேண்டுமென்ற கோரிக்கையாகும். இன்று அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் ஹலால் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் ஹலால் சான்றிதழ் நடைமுறையில் உள்ளமை காரணமாகவே ஏராளமான சுற்றுலாபயணிகள் இலங்கைக்கு வருகின்றனர். இலங்கையில் ஹலால் சான்றிதழை ரத்துச்செய்துவிட்டால் 32 சதவீத சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வரமாட்டார்கள். இதனால் இலங்கை வெளிநாட்டு பணத்தை இழந்துவிடும். எனவே ஒருபோதும் ஹலால் சான்றிதழ் இலங்கையில் ரத்துச்செய்யப்படமாட்டாது.

முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரஙகள் குறித்து நாம் கவனம் செலுத்துவோம். முஸ்லிம்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலும், முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கு மத்தியிலும் சிலர் மோதல்களை ஏற்படுத்த முயலுகின்றனர். இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும் எனவும் பஷில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

சுமார் 2 மணித்தியாலங்கள் நடைபெற்றுள்ள இந்த சந்திப்பில் மேலும் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடபட்டுள்ளன. இருந்தபோதும் அவற்றை ஊடகங்களில் பகிரங்கப்படுத்துவதில்லை என சந்திப்பில் கலந்துகொண்ட முஸ்லிம் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர்.
 

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &