குருணாகல், தெலும்புகொல்ல, ஹுதா பள்ளிவாசலும், பள்ளிவாசலில் இருந்தவர்களும் தாக்குதல்களுக்குள்ளாகியதையடுத்து முரண்பட்டுக் கொண்ட இரு தரப்பினருக்குமிடையே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை சமரசத்தை ஏற்படுத்தியுள்ளது.
இம்மாத ஆரம்பத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் ஒன்றின் மீது மற்றுமொரு குழுவினர் தாக்குதல் நடத்தினர். அத்துடன்,அப்பள்ளிவாசல் மீது ஒரு தென்னை மரத்த வெட்டி வீழ்த்தி அதன் கூரையினை சேதப்படுத்தினர். இந்நிகழ்வு அனைவரும் அறிந்ததே..
இது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கண்டி மாவட்ட கிளையினதும், குருணாகல் மாவட்ட கிளையினதும் உலமாக்கல் தெலும்புகொல்ல, பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள் ஐவரையும், ஹீதா பள்ளிவாசல் நிர்வாகிகள் ஐவரையும் அழைத்து நடத்தப்பட்ட விசாரணைகளையடுத்தே இச்சமரசம் ஏற்பட்டுள்ளது.
தெலும்புகொல்லையிலிருந்தும் 5 மைல் தூரத்திலுள்ள ரம்புக்கந்தெனிய ஜூம்ஆப் பள்ளிவாசலில் இச்சந்திப்பு 6 மணித்தியாலயமாக இடம்பெற்றது. இரு தரப்பினரும் தனித்தனியாக விசாரிக்கப்பட்டனர். உலமாக்கள் தெலும்புகொல்ல கிராமத்துக்கும் விஜயம் செய்து மக்களுடன் உரையாடியதுடன் சேதமாக்கப்பட்ட பள்ளிவாசலையும் பார்வையிட்டனர்.
கொள்கை முரண்பாடுடைய இரு தரப்பினரும் பிரச்சினைகளின்றி தமது சமயக் கடமைகளை சமாதானமாக முன்னெடுப்பதாக உறுதியளித்தனர். சமரச முயற்சி தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கையொன்று உலமா சபையின் தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
குறிப்பிட்ட சமரச குழுவில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் உபதலைவரும் கண்டி மாவட்ட தலைவருமான மௌலவி எம்.எச்.புர்ஹான் (மடவளை) , உலமா சபையின் பிரசார செயலாளரும் கண்டி மாவட்ட உபதலைவருமான மௌலவி எச்.உமர்தீன், குருணாகல் மாவட்ட தலைவர் மௌலவி சித்தீக், குருணாகல் நூரியா அரபுக் கல்லூரி அதிபர் மௌலவி முனவ்வர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 42 சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Nov 24, 2012
தெலும்பு கொல்ல பள்ளி விவகாரம் உலமா சபை தலையீட்டால் முடிவுக்கு வந்தது
Posted by AliffAlerts on 23:14 in செய்தி உள்ளூர் | Comments : 0