அஸ்லம் எஸ்.மௌலானா)
சமூக சேவைக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்த ஒரு தலைசிறந்த மார்க்க அறிஞரை முஸ்லிம் சமூகம் இழந்திருக்கிறது என கல்முனை மாநகர முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமுமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சமூக சேவையாளருமான அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம்.ஹசன் மௌலவியின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;
எமது கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினராகப் பதவி வகித்த ஹசன் மௌலவி அரசியல் கட்சி, கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால் திருகோணமலை மாவட்டத்தில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் மார்க்கப் பணிகளிலும் சமூக சேவைகளிலும் முழுமூச்சுடன் ஈடுபட்டு வந்துள்ளார்.
அவர் தனது தனிப்பட்ட மற்றும் அரசியல் பொது வாழ்வில் மிகவும் பக்குவத்துடன் நற்பண்புகள் நிறைந்த ஒருவராகத் திகழ்ந்தார். இதன் மூலம் ஏனைய அரசியல்வாதிகளுக்கும் பணக்கார வர்க்கத்தினருக்கும் நல்ல முன்மாதிரிகளை விட்டுச் சென்றுள்ளார்.
எகிப்து அல்-அஸ்ஹர் பல்கலைக்கழத்தின் முத்துக்களில் ஒன்றான ஹசன் மௌலவியின் மார்க்க சொற்பொழிவுகள் சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் சமூகப் பணிகளையுமே அதிகம் வலியுறுத்தி வந்துள்ளன. அதற்கேற்ப அவரும் அவற்றைக் கடைப்பிடித்து சமூகத்திற்கு வழிகாட்டியாகத் திகழ்ந்து வந்துள்ளார்.
இவரது மறைவு நாட்டுக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அவருக்கு நாம் செய்யும் காணிக்கை, அவரது மறுமை ஈடேற்றத்திற்காகவும் மேலான சுவர்க்கத்திற்கும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆப் பிரார்த்தனை செய்வதேயாகும்” என்று முதல்வர் நிஸாம் காரியப்பர் தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.