BREAKING NEWS

Aug 1, 2014

வாக்களிக்கும் போது முஸ்லிம் பெண்கள் நிகாப் – ஹிஜாப் அணிய முடியாது

தேர்தல்களில் வாக்களிக்கும் போது முஸ்லிம் பெண்கள் நிகாப் – ஹிஜாப் அணியவே முடியாது என்றும் காதுகளை மூடிய அடையாள அட்டையும் செல்லுபடியாகாது என்றும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் என ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.

ஊவா மாகாண சபைத் தேர்தல் தொடர்பில், கட்சிகளின் செயலாளர்களுக்கான விசேட கூட்டம், தேர்தல்கள் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் ஜாதிக ஹெல உறுமயவின் சார்பில் நான் கலந்துகொண்டு வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடிக்கு வருகின்ற முஸ்லிம் பெண்கள் முழுமையாக முகத்தைமூடி வருவது தொடர்பாகவும், தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்ளும்போது முஸ்லிம் பெண்கள் எடுக்கும் படத்தில், காதுகளை மூடும் வண்ணம் நிகாப் அணிவதும் பிரச்சினைக்குரியதாகும் என்று சுட்டிக்காட்டினேன்.

அதற்கு பதிலளித்த தேர்தல்கள் ஆணையாளர், வாக்குச் சாவடிக்கு வருகின்ற எந்தவொரு முஸ்லிம் பெண்ணோ வேறு எவரோ முகத்தை மறைத்து வர முடியாது. அதற்கு எந்தவொரு முறையிலும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும், நிகாப் மற்றும் ஹிஜாப் அணிந்து வாக்களிக்க முடியாது எனவும் தெளிவுறுத்தியதுடன் தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்ளும்போது காதுகளை மறைக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

இதற்கேற்ப, எதிர்வரும் தேர்தலில் முஸ்லிம் பெண்கள் வாக்களிக்கும்போது முகத்தை முழுமையாகவோ குறைவாகவோ மறைக்க முடியாது என்பதுடன் அடையாள அட்டையில் காதுகள் மறைக்கப்படக்கூடாது எனவும் தேர்தல் ஆணையாளர், கட்சி செயலாளர்களிடம் தெளிவுபடுத்தினார் என்றும் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.

பத்தரணில்லையிலுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துதெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் கேட்டபோது,

முகத்தை மூடிக்கொண்டு வாக்களிக்க முடியாது என்பது புதிய சட்டமல்ல. இவ்வாறானதொரு சட்டம் நடைமுறையில் இருக்கின்றது என்று தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, இந்த கூற்று, இனங்களுக்கிடையே முரண்பாடுகளை தோற்றுவிக்கும் செயற்பாடாகும் என்றார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &