இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது பந்தை த்ரோ செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இலங்கை ஸ்பின்னர் சச்சித்ர சேனநாயக்க பந்து வீச ஐசிசி தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த மே மாதம் 31ஆம் தேதி லார்ட்ஸ் ஒருநாள் போட்டியில் இவர் பந்தை முறையாக வீசாமல் த்ரோ செய்ததாக இங்கிலாந்தினால் புகார் எழுப்பப்பட்டு ஐசிசி குழு விசாரணை மெற்கொண்டது.
ஒரு 4 பந்துகளில் அவர் முழங்கையை 15 டிகிரிக்கு மேல் மடக்கி வீசியதாக பரிசோதனையில் தெரியவந்தது. இதனையடுத்து அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீசத் தடையை விதித்த ஐசிசி. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகத் தெரிவித்தது.
39 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய சச்சித்ர சேனநாயக்க 40 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
பந்து வீசாமலேயே இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லரை இவர் அதே தொடரில் ரன் அவுட் செய்து பெரும் சர்ச்சையில் சிக்கியதும் நினைவிருக்கலாம். இப்போது ஐசிசி நிர்வாகம் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா கையில் இருக்கிறது என்பதும் கவனத்தில் கொள்ளத் தக்கது.