ஐக்கியம் மற்றும் புரிந்துணர்வுக் கலாசாரத்தில் நாட்டின் முன்னேற்றத்திற்காக இலங்கை முஸ்லிம் சமூகம் செய்துள்ள பெறுமதியான பங்களிப்புக்களை நாம் இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூருவதுடன் இலங்கையின் எதிர்கால முன்னேற்றத்துக்காக இத்தகைய நல்லுறவுகள் தொடர வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது இன்று ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம் மக்களுக்கு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
இஸ்லாமிய பாரம்பரியங்களுக்கேற்ப ஒரு முக்கியமான இஸ்லாமிய கடமையான ஒரு மாத கால நோன்பை நிறைவேற்றியதன் பின்னர் இலங்கை வாழ் முஸ்லிம்கள் பெருநாள் கொண்டாட்டத்தில் உலகெங்கிலு முள்ள தமது சகோதர முஸ்லிம்களுடன் இன்று இணைந்து கொள்கின்றனர்.
இது புனித அல்குர்ஆனினதும் இறைத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களினதும் போதனைகளுக்கேற்ப நோன்பு ஆன்மீகப் பெருமானங்கள் மீதான ஆழ்ந்த ஈடுபாடு. தொடர்ச்சியான வணக்க வழிபாடுகள். தியாகங்கள் போன்ற சமயக் கடமைகளில் ஈடுபட்டதைத் தொடர்ந்து புத்துணர்ச்சியுடன் மகிழ்வுறும் சந்தர்ப்பமாகும்.
இலங்கை வாழ் முஸ்லிம்கள் பல நூற்றாண்டுகளாக எமது நாட்டின் ஏனைய இனங்கள் மற்றும் சமயங்களைச் சேர்ந்த மக்களுடன் மிகவும் ஐக்கியமாக வாழ்ந்து கடந்த காலங்களிலும் இந்த வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
நாட்டில் இன்று நிலவும் அமைதியான சூழ்நிலை அவர்களது சமய நடவடிக்கைகளுக்கு சாதகமாக அமைந்துள்ளதுடன் சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் உதவும் வகையில் இந்த நிலைமை மேலும் பலப்படுத்தப்பட வேண்டும்.
இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள். ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.