BREAKING NEWS

Jul 16, 2014

ஜெர்மனி வீரர்களுக்கு பெர்லினில் உற்சாக வரவேற்பு

பெர்லின்: உலக கோப்பை வென்று நாடு திரும்பிய ஜெர்மனி வீரர்களுக்கு பெர்லினில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு FIFA சார்பில், 20வது உலக கோப்பை கால்பந்து பிரேசிலில் நடந்தது. இதன் FINALலில் அர்ஜென்டினாவை வீழ்த்திய ஜெர்மனி, நான்காவது முறையாக உலக கோப்பை கைப்பற்றியது.

நேற்று ஜெர்மனியின் வெற்றி வீரர்களை மட்டும் சுமந்து கொண்டு, ரியோ டி ஜெனிரோவில் இருந்து திரும்பியது தனியார் விமானம். SRI LANKA நேரப்படி நேற்று மதியம் 2.00 மணிக்கு, ஜெர்மனி தலைநகர் பெர்லினின் தேஜெல் விமான நிலையம் சென்றடைந்தது.

முதலில் விமானத்தில் இருந்து கேப்டன் பிலிப் லாம், உலக கோப்பையை ஏந்திய படி வர, அடுத்து வீரர்கள் வரிசையாக வெளியே வந்தனர்.

இங்கு காத்திருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள், வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின் அங்கிருந்து திறந்தவெளி பஸ்சில், 9.6 கி.மீ., துாரம் உள்ள பிரன்டன்பெர்க் கேட் என்ற பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

இந்த பேருந்தில் 1954, 1974, 1990, 2014 என, ஜெர்மனி கோப்பை வென்ற ஆண்டுகள் பெரிதாக எழுதப்பட்டு இருந்தன. ரோட்டின் இருபக்கத்திலும் லட்சக்கணக்கான ரசிகர்கள், தங்களது ஆஸ்தான ‘ஹீரோக்களை’ காண, முதல் நாள் இரவில் இருந்தே ரசிகர்கள் வரத்துவங்கினர். 

வீரர்களை காண்பதற்காக முண்டியடித்துக் கொண்டிருந்தனர். பிரன்டன்பெர்க் பகுதியில் அமைக்கப்பட்ட மேடையின் முன்பு, நேற்று காலையில் இருந்தே ரசிகர்கள் பெருமளவு குவிந்தனர். இங்கு அமைக்கப்பட்டு இருந்த ராட்சத திரையில், ஜெர்மனி–அர்ஜென்டினா மோதிய பைனல் ஒளிபரப்பட்டது.

இதுகுறித்து ஜெர்மனி வீரர் ஸ்கீவன்ஸ்டீகர் கூறுகையில்,‘‘ எங்கள் மக்களை இதுபோன்ற தருணத்தில் பார்ப்பதில், மகிழ்ச்சியடைகிறோம். அடுத்த சில நாட்களுக்கு வெற்றிக் கொண்டாட்டம் தான். இம்முறை கோப்பை எங்களுடன் இருக்க உதவிய கடவுளுக்கு நன்றி.’’ என்றார்.

வீரர்கள் சென்ற பேருந்து, மக்கள் வெள்ளத்தில் மிதந்து சென்றது குறித்து ஜெர்மனி வீரர் பொடோல்ஸ்கி கூறுகையில்,‘‘ இங்கு என்ன நடக்கின்றது, இதைப்பார்க்கும் போது வியப்பாக உள்ளது,’’ என்றார்.

விமானம் மீது மோதல்

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ விமான நிலையத்தில் வீரர்களை ஏற்றிக் கொண்டு புறப்படத் தயாரானது தனியார் விமானம். இந்நிலையில், ‘லக்கேஜ்களை’ ஏற்றிக் கொண்டு வந்த ‘டிரக்’ ஒன்று, விமானத்தின் ஒரு பக்கத்தில் இடித்து விட்டது. இதனால், வீரர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. விமானம் புறப்பட மட்டும் 58 நிமிடங்கள் தாமதம் ஆனது. 

பயிற்சியாளர் பெருமிதம்

ஜெர்மனி பயிற்சியாளர் ஜோச்சிம் லோவ் கூறுகையில்,‘‘ இது நீண்ட கால முயற்சிக்கு கிடைத்த வெற்றி. ரசிகர்கள் முன்பு கோப்பையுடன் இருப்பதால் மகிழ்ச்சியடைகிறோம். இந்த வெற்றி நீங்கள் இல்லாமல் கிடைத்திருக்காது,’’ என்றார்.

மேடையில் கொண்டாட்டம்

பிரன்டன்பெர்க் மேடையில் வீரர்கள் வழக்கமான ஸ்டைலில் ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். கேப்டன் பிலிப் லாம் கோப்பையை தனது முன்பு வைத்துக் கொள்ள, முல்லர் உட்பட 4 வீரர்கள் இவரை சுற்றி மறைத்துக் கொண்டு வந்தனர். ரசிகர்கள் முன்பு வந்ததும், மற்ற 4 பேரும் அப்படியே ‘ஜாலியாக’ கீழே விழ, லாம் கோப்பையை உயர்த்தி பிடிக்க, ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.










Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &