BREAKING NEWS

Jul 15, 2014

இஸ்ரேலின் பயங்கரவாதத் தாக்குதல்கள்: ACJUன் ஊடக அறிக்கை



இஸ்ரேலின் அடாவடித்தனத்திற்கு எதிராக உலக நாடுகள் குரல்கொடுக்க வேண்டும்!

அப்பாவிப் பலஸ்தீன மக்களின் நிலங்களை ஆக்கிரமித்து, மேற்கொள்ளப்படுகின்ற இஸ்ரேலின் பயங்கரவாதத் தாக்குதல்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிப்பதோடு, அதற்கெதிராக சர்வதேச சமூகம் குரல் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.

மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு இஸ்ரேல் ஓர் அச்சுறுத்தலான நாடு என்பதை மீண்டும் அது நிரூபித்து விட்டது. இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக ஐ.நா எடுத்த தீர்மானங்கள் காற்றில் வீசப்பட்டுள்ளது என்றே நாம் கருதுகின்றோம்.

இஸ்ரேலின் மிலேச்சத்தனமான தொடர் தாக்குதல்களால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் அதிகமான அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இத்தகைய மனிதப் படுகொலைகளுக்காக இஸ்ரேல் கூறும் காரணங்கள் நியாயமற்றதாகும். பலஸ்தீன மக்களுக்கு தம்மையும், தமது பூமியையும் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை முழுமையாகவே உண்டு என்பதை இஸ்ரேலுக்கு சர்வதேச சமூகம் உணர்த்த வேண்டும்.

பலஸ்தீனப் பூமியை ஆக்கிரமித்து, அங்குள்ள முஸ்லிம்களைக் கொலை செய்யும் யூதர்கள் கண்டிக்கப்பட வேண்டும். பலஸ்தீன மக்களின் பாதுகாப்பும் சுதந்திரமுமே சர்வதேச அமைதிக்கும் குறிப்பாக மத்திய கிழக்கின் அமைதிக்கும் வழிவகுக்கும் என்பது சர்வதேசம் ஏற்றுக் கொள்கின்ற ஓர் விடயமாகும். அத்தோடு பலஸ்தீனம் என்பது மூன்று புனித பூமிகளில் ஒன்றான ‘பைத்துல் முகத்தஸ்’ அமைந்துள்ள பூமியாகும். இதனை மீட்டெடுப்பது இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாட்டின் ஓர் அம்சமாகும். அது உலகிலுள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் சொந்தமான பூமியாகும். அதற்காகப் பிரார்த்திப்பதும், இது குறித்து கவனம் செலுத்துவதும் அனைத்து முஸ்லிம்களதும் கடமையாகும்.

எனவே, பலஸ்தீன பூமியின் சுதந்திரத்திற்காகவும், அம்மக்களின் பாதுகாப்புக்காகவும் இப்புனித ரமழானில் துஆ செய்யுமாறு அனைத்து முஸ்லிம்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கிறது.

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாரக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா


Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &