BREAKING NEWS

Jul 31, 2014

இஸ்ரேலின் கொடூர தாக்குதலில் 15 குழந்தைகள் பலி.. கண்ணீர் விட்டு அழுத ஐ.நா. அதிகாரி!

ஐ.நா.: இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதலில் பள்ளிக்கூடத்தில் தங்கியிருந்த 15 குழந்தைகள் அநியாயமாக உயிரிழந்த சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த ஐ.நா. மறு சீரமைப்பு மற்றும் நிவாரண முகமையின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ் கின்னஸ், கண்ணீர் விட்டு அழுதார்.

இதையடுத்து அவரை உடனடியாக பொறுப்பிலிருந்து நீக்குமாறு ஐ.நா.வைக் கேட்டுக் கொண்டுள்ளது இஸ்ரேல்.

இஸ்ரேலுக்கு எதிராக இவர் பேசுகிறார். இவரை தொடர ஐ.நா. அனுமதிக்கக் கூடாது என்று திமிராக கூறியுள்ளது இஸ்ரேல்.

ஜபலயா பள்ளிக் கட்டடம் மீது இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதலில் அங்கிருந்த 15 பிள்ளைகள் அநியாயமாக உயிரிழந்தன. இந்த இடத்தில் ஏராளமானோர் தஞ்சமடைந்து தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இடத்தில் அப்பாவி மக்களும், குழந்தைகளும்தான் உள்ளனர் என்று இஸ்ரேல் ராணுவத்தைத் தொடர்பு கொண்டு ஐ.நா. அதிகாரிகள் 17 முறை கூறியும் கூட மிருகத்தனமாக இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது இஸ்ரேல் என்று ஐ.நா. முகமையின் இன்னொரு பிரமுகரான பியர்ரி கிரஹென்புல் கூறியுள்ளார்.

இந்த நிலையில் கின்னஸ் இந்த சம்பவம் குறித்து டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது பேசியபோது கண்ணீர் விட்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் வெளியிட்ட ஒரு அறிக்கையில், தாக்குதலுக்குள்ளாகும் மக்களுக்கும் இதயம் உள்ளது என்பதை நாம் உணர வேண்டும். அதுவும் நம்மைப் போல ஒரு உயிர் என்பதை உணர வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் கின்னஸ் தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிராகப் பேசி வருகிறார். எனவே அவரை ஐ.நா. பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.

இதுகுறித்து ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் ரான் பிரசோர் கூறுகையில், இதுதொடர்பாக ஐ.நா.வுக்குப் புகார் தரப்பட்டுள்ளது கின்னஸ் ஹமாஸுக்கு ஆதரவாக பேசுகிறார் என்றார்.

ஜபலயா பள்ளியில் கிட்டத்தட்ட 3300க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் அடைக்கலம் புகுந்திருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &