மாட்ரிட்: கொலம்பிய அணியின் இளம் வீரர் ரோட்ரிகஸ் ரியல் மாட்ரிட் அணிக்காக ரூ. 1250 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
கொலம்பியா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ்(23). சமீபத்தில் பிரேசிலில் நடந்து முடிந்து உலக கோப்பை கால்பந்து தொடரில் 5 போட்டியில் பங்கேற்று 6 கோல் அடித்தார். இதன் மூலம், ‘கோல்டன் ஷூ’ விருதை வென்று அசத்தினார். கடந்த ஆண்டு மே மாதம் மொனாகோ கிளப் அணி சார்பில் ஒப்பந்தமானார். இந்நிலையில், இந்த அணியிலிருந்து விலகிய இவர், நேற்று ரியல் மாட்ரிட் அணியில் இணைந்தார். இவர் ரூ. 1250 கோடிக்கு ஆறு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்காக, ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் வந்த ரோட்ரிக்ஸ் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதில் வெற்றி பெற்ற இவரின் ஒப்பந்தம் உறுதியானது. இதன் மூலம், கால்பந்து அரங்கில் ஒரு அணியிலிருந்து மற்றொரு அணிக்கு அதிக விலைக்கு ஒப்பந்தமான நான்காவது வீரர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, காரத் பாலே, லுாயிஸ் சுவாரஸ் இந்த பெருமையை அடைந்தனர்.
இது குறித்து ரியல் மாட்ரிட் அணி வெளியிட்ட அறிக்கையில்,‘‘ மொனாகோ அணியுடன் ஒப்பந்தம் செய்து ரோட்ரிக்சை எங்கள் அணிக்கு தேர்ந்தெடுத்தோம். இனி ஆறு ஆண்டுகளுக்கு இவர் ரியல் மாட்ரிட் அணி சார்பில் விளையாடுவார்,’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி போர்ச்சுகல் அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன், இவரையும் ரியல் மாட்ரிட் அணியில் ரசிகர்கள் காணலாம்.