BREAKING NEWS

Jul 11, 2014

இன்று ஜூலை 11 'உலக சனத் தொகை தினம்'

1989 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜூலை 11 ஆம் திகதி 'உலக சனத்தொகை தினம்' (World Population Day) அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது. உலக சனத்தொகை அதிகரிப்பானது, மக்களின் சமூ, பொருளாதார துறையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, மக்களின் ஆரோக்கிய வாழ்வு, குடும்பநெறியுடன் கூடிய உயர் மனித விழுமியங்கள், சமூகச்சீர்கேடுகள் போன்றவற்றில்கூட பல்வேறுபட்ட பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகிறது.

பிறப்பு மற்றும் இறப்பு வீதத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள உலக சனத்தொகை கடிகாரத்தின் படி (World Population Clock), 2009 ஜூலை 10 ஆம் திகதி வரை உலக சனத்தொகை 6.76 பில்லியனாகவும், 2010 ஆம் ஆண்டு ஜூலையில் 6.85 பில்லியனாகவும் இருந்தது. இன்று உலகின் சனத்தொகை 7.24 பில்லியனாக உள்ளது. இதே வேகம் தொடர்ந்தால், 2020 ஆம் ஆண்டில் 7.6 பில்லியனாகவும், 2030 ஆம் ஆண்டில் 8.2 பில்லியனாகவும், 2040 ஆம் ஆண்டில் 8.8 பில்லியனாகவும், 2050 ஆம் ஆண்டில் 9.2 பில்லியனாகவும் உலக சனத்தொகை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

நவீன காலத்தில் மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள அபிரிமிதமான முன்னேற்றம், சனத்தொகை அதிகரிப்பிற்கு பிரதான காரணமாகும். அத்துடன், இயற்கைப் பேரழிவுகள் மற்றும் அனர்த்தங்களைக் கட்டுப்படுத்துவதில் முன்பைவிட தற்பொழுது ஏற்பட்டுள்ள முன்னேற்றம், தொற்றுநோய்களை கட்டுப்படுத்துவதில் கிடைத்த வெற்றி போன்றவையும் சனத்தொகை அதிகரிப்பிற்கான பிரதான காரணங்களாகக் கொள்ளலாம். மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்படும் முதலாவது பிரச்சினை உணவுப் பற்றாக்குறையாகும். தவிர; சமூக சீர்கேடுகள், சூழல் மாசடைதல், சுகாதாரப் பிரச்சினை, வேலையில்லா திண்டாட்டம், போக்குவரத்து நெரிசல், காணிப் பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என்பவற்றையும் முக்கிய பிரச்சினைகளாகக் கொள்ளலாம்.

கி.மு.4000 வருடங்களுக்கு முன்பிருந்தே சனத்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டதாக வரலாறு தெரிவிக்கின்றது. மத்திய கிழக்கிலுள்ள பெபிலோனியாவில் மக்களின் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு சனத்தொகை மதிப்பீடு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதுவே உலகின் முதலாவது கனத்தொகை கணக்கெடுப்பாகும். இன்று உலகில் ஒவ்வொரு நாட்டிலும் சனத்தொகை கணக்கெடுப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. ஏனெனில், ஒரு நாட்டில் வாழும் சனத்தொகையின் மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டே பெரும்பாலும் அந்நாட்டின் அபிவிருத்தி, உற்பத்தி போன்ற துறைகளில் முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியமானது (United Nations Population Fund - UNFPA), சனத்தொகை பெருக்கம் குறித்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக, உலக சனத்தொகை தினத்தில் உலக மக்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளில் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றது.

ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் நடவடிக்கைகள் பின்வருமாறு:
*உலகின் எல்லா இடங்களிலும் வாழும் அனைத்து வயது மட்டத்தினரதும் உரிமைகளை பாதுகாத்தல்.
*மக்களிடையே சுகாதார வளங்களை சமமாகப் பகிர்ந்தளிப்பதோடு, அவற்றை அனுபவித்து வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்குதல்.
*ஒவ்வொரு நாட்டிற்கும் உரிய முறையில் கொள்கைகளை உருவாக்கி நடைமுறைப்படுத்தல்.
*வறுமையை ஒழிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
*அடிப்படைக் கல்வி, கல்வியில் சமவாய்ப்பு, கல்வி கற்பதற்கான உரிமை என்பவற்றை நிலைநாட்டுதல்.

அதிக சனத்தொகையுடைய 10 நாடுகள்
01. மக்கள் சீனக் குடியரசு - 1,393,000,000
02. இந்தியா - 1,267,000,000
03. ஐக்கிய அமெரிக்கா - 322,563,000
04. இந்தோனேசியா - 252,780,000
05. பிரேசில் - 202,020,000
06. பாகிஸ்தான் - 195,109,000
07. நைஜீரியா - 178,478,000
08. பங்களாதேஸ் - 158,497,000
09. ரஸ்யா - 142,470,290
10. ஜப்பான் - 127,630,000

மிக குறைந்த சனத்தொகையுடைய 10 நாடுகள்
01. பிட்கேர்ன் தீவுகள் - 67
02. வத்திகான் - 500
03. டொகேலோ - 1,212
04. நியூ - 2,166
05. ஃபோக்லண்ட் தீவு - 3,300
06. சென்ஹெலெனா - 4,900
07. மொன்செரட் - 6,000
08. டுவலு - 11,992
09. நாவுறு - 13,528
10. எங்கில்லா - 15,410


Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &