மும்பை: மும்பை தாதர் பகுதியில் ஒரு இளம்பெண்ணின் வாயில் ஆசிட்டை ஊற்றி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை தாதர் பகுதியை சார்ந்த ஜிதேந்திரா (வயது 20) என்பவன், அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளான். இதற்கு அப்பெண் மறுப்பு தெரிவிக்கவே, பொதுமக்கள் முன்னிலையில் அடித்ததோடு, தன்னை காதலிக்கா விட்டால், கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளான்.
இது குறித்து பெண்ணின் தந்தை காவல்துறையில் புகார் தெரிவிக்கவே, காவலர்கள் ஜிதேந்திராவை அழைத்து எச்சரித்து அனுப்பி விட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில், அப்பெண் கோரை கடற்கரையில் நின்றிருந்த போது, ஜிதேந்திரா அப்பெண்ணின் வாயில் ஆசிட்டை ஊற்றி கடலில் தள்ளி விட்டிருக்கிறான்.
இதனைக் கண்ட உடனிருந்தவர்கள், ஜிதேந்திராவை பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், ஜிதேந்திராவை கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண், ஆபத்தான நிலையில் மருத்துவனையில் சேர்க்கப்பட்டிருக்கிறாள். அவளது முகப்பகுதி 10 சதவீத அளவில் எரிந்து விட்டதாக தெரிகிறது.
அப்பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுத்து ஜிதேந்த்திராவை கைது செய்யாததன் காரணத்தால், ஒரு அப்பாவி பெண் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்பது காவல்துறையினரின் மீது பொதுமக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.