வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
நடமாடும் சேவைகளை நடத்தி குறித்த பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொடுத்ததாக ஆட்பதிவு ஆணையாளர் சரத் குமார தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் ஜூலை மாதம் மூன்று நடமாடும் சேவைகளை நடத்தி மக்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
இதற்கமைய ஏற்கனவே அந்த மாகாணத்தைச் சேர்ந்த 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை ஆட்பதிவு திணைக்களம் அனுப்பி வைத்துள்ளது.
வடமாகாணத்தைச் சேர்ந்த மக்களிடமிருந்து மேலும் சுமார் 10 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் ஆட்பதிவு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் பெருந்தோட்ட மக்களுக்காகவும் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிப்பதற்கான விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டதாக ஆட்பதிவு ஆணையாளர் சரத் குமார தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடைபெறவுள்ள மூன்று மாகாணங்களையும் சேர்ந்த மக்களிடமிருந்து கிடைத்துள்ள விண்ணப்பங்களுக்கு அமைய பெரும்பாலானவர்களுக்கு தேர்தல் தினத்திற்கு முன்னர் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.