மட்டக்குளி, கெமுனுபுர பகுதியில் தற்காலிக குடியிருப்பு தொகுதியொன்றில் பரவிய தீயினால் 37 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.
தீயினால் 164 பேர் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளதுடன், அவர்கள் கெமுனுபுர பள்ளிவாசலில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வீடொன்றில் இருந்த குப்பிவிளக்கு கவிழ்ந்து தீ பரவியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
பொலிஸார் மற்றும் தீயணைப்பு சேவை உத்தியோகத்தர்கள் இணைந்து நேற்றிரவே தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இந்த தீ விபத்து தொடர்பில் மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் கூறியுள்ளது.