BREAKING NEWS

Aug 4, 2013

ஈரானின் புதிய ஜனாதிபதி ஹஸன் ரூஹாணி

BBC: தெஹ்ரானின் நாடாளுமன்றத்துக்கு முன்பாக தனது முதலாவது உரையை ஆற்றிய அவர், இரானின் மக்கள், ஒரு சுதந்திரமான, நியாயமான சூழலில், மாற்றம் மற்றும் வளர்ச்சி, மரியாதை மற்றும் கௌரவம்ஆகியவற்றின் மீதான தமது வேட்கையை வெளிப்படுத்தியுள்ளனர் என்று கூறினார். பொருளாதாரத்தை மேம்படுத்தவும், ஊழலுக்கு எதிராகப் போராடவும், வாய்ப்புக்களையும், தொழிலையும் உருவாக்கவும் அவர் உறுதி வழங்கியுள்ளார்.

இரானிய சமூகத்தை உருவாக்குவதில் ஆண்களுடன் தோளுக்கு, தோள் நின்று பெண்கள் வழங்கிய பங்களிப்பை பாராட்டிய அவர், பெண்களுக்கு மேலும் உரிமைகளையும், வாய்ப்புக்களையும் வழங்குவது தமது முன்னுரிமை நடவடிக்கைகளில் ஒன்றாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். மத மற்றும் இன சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதும் தனது கடமை என்றும் அவர் கூறினார்.

தினசரி வாழ்க்கையில் அரசாங்கம் தனது பங்கை குறைக்க வேண்டும் என்று கோரிய அவர், மக்களை அது நம்ப வேண்டும் என்று கூறினார்.இரு தரப்பு நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையிலேயே தனது வெளியுறவுக்கொள்கை இருக்கும் என்று கூறியுள்ள அவர், தடைகள் மூலமான அச்சுறுத்தல்கள் பயனளிக்காது என்றும் கூறினார்.

ஏனைய நாடுகளுடனான உறவு பகைமையைக் குறைத்தலின் அடிப்படையில் இருக்கும் என்று கூறிய அவர், பிராந்தியத்தில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் இரான் விரும்பும் என்றும், பலப் பிரயோகத்தின் மூலம் அரசாங்கங்களை மாற்றுவதை அது ஆதரிக்காது என்றும் கூறினார்.

அமெரிக்காவின் வாழ்த்து

இரானின் புதிய அதிபராகியுள்ள றொஹானிக்கு வாழ்த்து தெரிவித்து அமெரிக்க அதிபர் அலுவலகம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. இரானின் அணுத் திட்டம் தொடர்பில் சர்வதேச சமூகத்துக்கு இருக்கின்ற கவலைகளைத் தீர்க்க விரைவாக நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் இரானுக்கு கிடைத்துள்ளதென்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணு விவகாரம் தொடர்பில் சமாதானமான ஒரு தீர்வைக் காண்பதற்கு ஆழமாகவும் அக்கறையுடனும் செயல்பட புதிய இரானிய அரசாங்கம் விரும்புமானால், அமெரிக்கா நல்ல விதத்தில் ஒத்துழைக்கும் என்று அமெரிக்க அதிபர் மாளிகை சார்பாகப் பேசவல்ல ஜே கார்னி கூறியுள்ளார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &