பாதிப்படைந்த பிரதேசங்களில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் மூலம் மக்கள் உண்மையான பாதுகாப்பினை பெற முடியும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் வெளியுறவு பொறுப்பாளர் கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
எனினும் வடக்கில், இராணுவத்தின் எண்ணிக்கையினை குறைத்து, சிவில் நிர்வாகத்தை அதிக அளவில் அறிமுகப்படுத்துவதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் மேம்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து வெளியாகும் 'தி இந்து' பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கிளிநொச்சியிலுள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வைத்தே இந்த பேட்டி வழங்கப்பட்டுள்ளது.
கல்வி அறிவின் முக்கியத்துவம் தற்போது தனக்கு நன்கு புரிவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்திற்கு அமைய தாம் முன்னர் செயல்பட்டிருந்தால், தனது நிலைமை நன்கு மேம்பட்டிருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தம் காரணமாக பாதிப்படைந்த நிலையில் இந்த நிலையத்தில் உள்ள சிறார்களின் கல்விக்கு தாம் முக்கியத்துவம் அளிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி உதவியில் இயங்கும் இந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தில், தற்போது 60 பேர் தங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தால் பாதிப்படைந்த சிறார்களை அரசியல் காரணங்களுக்காக உணர்ச்சியைத் தூண்டக்கூடிய செயற்பாடுகளை மேற்கொள்வதிலிருந்து சம்பந்தபட்டவர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் கே.பி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
May 13, 2013
வடக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும்: கே.பி
Posted by AliffAlerts on 13:12 in NL | Comments : 0