BREAKING NEWS

May 23, 2013

வடக்கு களத்தில் குதிக்க முஸ்லீம் காங்கிரஸின் புது வியூகம்!


பொதுவாக வடமாகாணத்திலும், குறிப்பாக வன்னி மாவட்டத்திலும் முஸ்லிம்களின் வாக்குகள் சிதறடிக்கப்படாமல் அதனூடாக வடமாகாண சபையில் முஸ்லிம் பிரதிநித்துவத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்தில் வியூகமொன்றை வகுத்துச் செயல்படுவதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வந்துள்ளது.
வடமாகாண முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சமகால அரசியல் சூழ்நிலை, வடமாகாண சபை தேர்தல் என்பன தொடர்பில் ஆராயும் நோக்கத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில், நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை அமைச்சரின் இல்லத்தில் நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலொன்றின் போதே இதுபற்றித் தீர்மானிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ரீ.ஹஸனலி (செயலாளர் நாயகம்), முத்தலிப் பாவா பாரூக், பைசல் காசிம், கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமத் (பிரதித் தலைவர்) மற்றும் வன்னி மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதி உயர்பீட உறுப்பினர்கள், மக்கள் (பிரதேச சபை, நகரசபை) பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வட மாகாண சபைக்கான தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது மரம் சின்னத்தில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது இணைந்து போட்டியிடுவதா என்ற கேள்வி எழுந்தபொழுது அது குறித்து அலசி ஆராயப்பட்ட சந்தர்ப்பத்திலேயே மேற்கண்ட முடிவுகளை கருத்திற்கொண்டே இந்த முடிவு எட்டப்பட்டது.
இன்றைய சூழ்நிலையில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது இணைந்து போட்டியிடுவதா என்ற விடயத்தில் சூடான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. எவ்வாறாயினும், தேர்தல் தினம் பற்றிய அறிவித்தல் வெளியான பின்னரே எவ்வாறு போட்டியிடுவது என்பது பற்றிய இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இக்கலந்துரையாடலின் போது, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அரசாங்கத்தில் அதாவது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியாக இருக்கின்ற போதிலும், வன்னியில் கட்சியின் ஆதரவாளர்கள் எதிர்க்கட்சியினர் போன்று நடாத்தப்படுவதாகவும், முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு அநீதிகள் இழைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அரசாங்கத்தின் அடிவருடிகள் செய்யும் அட்டகாசங்கள் பற்றியும் கூறப்பட்டது.
இந்நாட்டு முஸ்லிம்களின் அதிகபட்ச ஆணையைப் பெற்றுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மிகவும் பொறுப்புணர்ச்சியுடனேயே தீர்மானங்களை மேற்கொள்ளும் என நம்பிக்கை தெரிவித்த கட்சியின் தலைவர் அமைச்சர் ஹக்கீம் வடமாகாண சபையில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக்கொள்வதற்கான மிகச் சிறந்த உபாயம் ஒற்றுமையேயாகும் என வலியுறுத்தினார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &