BREAKING NEWS

May 19, 2013

ஹலால் உணவுகள் சந்தையில் நிறைவு

ஹலால் சான்றிதழ் பொறிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் சந்தையில் தற்போது தீர்ந்து போயுள்ளதால் முஸ்லிம் பாவனையாளர்கள் பெரும் திண்டாட்டத்துக்கு ஆளாகியுள்ளனர் எது ஹலால் என அறிய முடியாதுள்ளமையினால் பொருட்களை வாங்குவதில் சிரமங்கள் எதிர்நோக்கப்படுகின்றது.
.
பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் பொறிக்கும் பொதுபல சேனாவின் தீவிர எதிர்ப்பினையடுத்து கடந்த சில மாத காலத்துக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த போதிலும் ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்ட ஹலால் சான்றிதழ் உள்ள பொருட்கள் சந்தையில் விற்பனையில் இருந்தன. எனினும், தற்போது ஹலால் சான்றிதழ் பொறிக்கப்பட்ட பொருட்கள் யாவும் விற்றுத் தீர்ந்து விட்டன. தற்போது சுப்பர் மார்க்கெட்டுக்கள், கடைகளில் ஹலால் சான்றிதழ் பொறிக்கப்பட்ட பொருட்களே இல்லை. இதனால் முஸ்லிம் பாவனையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதுடன் திண்டாட்டத்துக்கும் ஆளாகியுள்ளனர்.
.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள், முஸ்லிம் அமைப்புக்கள் இந்த விவகாரம் குறித்து மௌனமாக இருப்பதும் முஸ்லிம்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சந்தையில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்திருக்கக்கூடிய பெருந்தொகைப் பொருட்கள் குவிந்திருப்பதால் ஹலால், ஹராம் பேணுவதில் சிக்கலான நிலைமைகள் தோன்றியுள்ளன.
.
விசேடமாக சந்தையில் பொருட் கொள்வனவுக்காக முஸ்லிம் பெண்களே அதிகம் செல்கிறார்கள். இவர்கள் ஹலால் உணவுகளைப் பெறுவதற்கு மிகுந்த சிரமப்பட வேண்டியுள்ளது. அன்றாட உணவுப் பொருட்கள், பால்மா வகைகள், ஏனைய உணவுப் பொருட்களை வாங்குவதில் கடும் சிரமங்களை தாம் எதிர்கொள்வதாக முஸ்லிம் பெண்கள் தெரிவிக்கின்றனர்.
.
முன்பு சுப்பர் மார்க்கெட் சென்று இறைச்சி, பால்மா ஏனைய உணவுப் பொருட்களை எந்தவித சிரமமும் இன்றி வாங்கி வந்தேன். இப்போது ஹலால் சான்றிதழ் இன்மையால், சுப்பர் மார்க்கெட்டுக்களில் சென்று எதனை வாங்குவது, எதனை விடுவது என்று தெரியாது தவிக்க வேண்டியிருக்கிறது என அப் பெண்கள் மேலும் தெரிவித்தனர்.
.
இந்த நாட்டு முஸ்லிம்கள் ஹலால் உணவுப் பொருட்களையே கடந்த காலங்களில் உண்டனர். சந்தையில் தாராளமாக ஹலால் உணவுகளும் இருந்தன. இப்போது நிலைமை மாறி விட்டது. மக்கள் திண்டாடுகிறார்கள். உலமா சபையும், முஸ்லிம் அமைப்புக்களும் மௌனம் காப்பது ஏன் என இப் பெண்கள் கேள்வியெழுப்புகின்றார்கள்.
.
ஹலால் உணவுகளை சந்தையில் எவ்வாறு பெற்றுக்கொள்வது எந்தெந்தப் பொருட்கள் ஹலால், எந்தப் பொருட்கள் வாங்கக் கூடாது என்பதை உலமா சபை பகிரங்கப்படுத்த வேண்டுமென்றும், அவ்வாறான பொருட்களை பட்டியலிட்டு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் இவர்கள் வலியுறுத்துகின்றனர்.
.
--நவமணி 

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &