பரகஹதெனிய இளைஞர் சங்கத்தினால் ஏற்பாடுசெய்து நடாத்தப்பட்ட இரத்ததான முகாம் (BLOOD DONATION CAMPAIGN) இன்று சனிக்கழமை காலை 08.00 மணிமுதல் 14.00 மணிவரை பரகஹதெனிய தாய்சேய் சிகிச்சை நிலையத்தில் (MATERNITY CLINIC) இடம்பெற்றது.
பரகஹதெனிய இளைஞர் சங்கத்தின் 16வருட பூர்த்தியை முன்னிட்டு இவ்விரத்ததான நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்விரத்ததான நிகழ்வின் நோக்கம் பற்றி பரகஹதெனிய இளைஞர் சங்கத்தின் சிரேஷ்ட ஆலோசகரும் ஆரம்ப ஸ்தாபகர்களில் ஒருவருமான சகோதரர் பைசர் பாரூக் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், "நாம் எமது சங்கத்தின் 16ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்திருக்கும் இவ் இரத்ததான நிகழ்வு உண்மையில் இன்று சமூகத்தில் இன்றியமையாத ஒருவிடயமாகும் நாம் சமூக நலனை நோக்காகக்கொண்டு ஏற்பாடு செய்திருக்கின்றோம் உங்களுக்குத்தெரியும் எமது சங்கம் அதன் ஆரம்பம் முதலே எமது சமூகத்தின் மேம்பாட்டை முதன்மையாகக் கொண்டே நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அந்தவகையில் எமது சங்கத்தின் தற்போதைய தலைவரும் ஆரம்ப ஸ்தாபகர்களில் ஒருவருமான சகோதரர் அப்துல் ரஹ்மான் மற்றும் தற்போதைய சங்க உறுப்பினர்கள், ஆலோசகர்கள், எமது மஸ்ஜிதுகள், மற்றும் எமது கிராமத்தின் வைத்தியர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சியின் பிரதிபலனாக இந்நிகழ்வு இதுவரையில் அல்ஹம்துலில்லாஹ் சிறந்த முறையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது காலை வேளையிலேயே 100க்கும் மேற்பட்ட சகோதரர்கள் வருகைதந்ததுடன், நாம் பெண்களுக்கு பிரத்தியேகமான ஏற்பாடுகளையும் மேட்கொண்டிருப்பதால் அதிகளவிலான பெண்களின் பங்களிப்பையும் இதுவரை எம்மால் கண்டுகொள்ளக்கூடியதாக இருந்தமை மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
அந்தவகையில் எமக்கு இந்நிகழ்வை சிறந்த முறையில் ஏற்பாடுசெய்வதட்கு பல்வேறு வகைகளில் எமக்கு ஒத்துழைப்பு வழங்கிய சகலருக்கும் இவ்வேளையில் எமது சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அத்துடன் இன்ஷா அல்லாஹ் வருடாந்தம் இவ்வாறான இரத்ததான நிகழ்வை நடாத்துவதற்கும் திட்டமிட்டுள்ளோம்." எனக்குறிப்பிட்டார்.
மாவத்தகம பொது சுகாதார பரிசோதகர் அலுவலகம் மற்றும் இரத்ததான வங்கியின் பங்களிப்புடன் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் பரகஹதெனிய இளைஞர் சங்கத்தின் தற்போதைய மற்றும் முன்னையநாள் உறுப்பினர்கள் உட்பட இன்னும் பல சமூக நலன்விரும்பிகள் கலந்துகொண்டு தேவையான சகல வசதிகளையும் பெற்றுக்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.












