BREAKING NEWS

May 2, 2013

தமிழ் படங்களுக்கே முன்னுரிமை – ARR

main_image-43609
இனி தான் தமிழ் படங்களுக்கே முன்னுரிமை கொடுத்து இசையமைக்க உள்ளேன் என்று ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். இதுவரை வரை காலமும் வெளிநாடுகளில் தான் தங்கி இருந்ததாகவும் குறிப்பிட அவர் இனி தான் சென்னையிலேயே இருக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார் .

கேள்வி:- ஆஸ்கார் விருது பெற்றபின், தமிழ் படங்களுக்கு இசையமைப்பதை குறைத்துக்கொண்டது ஏன்?
பதில்:- ஆஸ்கார் விருது பெற்றபின், ஹாலிவுட் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் வந்தன. அந்த வாய்ப்புகளை தவிர்க்க முடியவில்லை. ஒரு வருடம் அமெரிக்காவில் தங்கியிருக்க வேண்டியதாகி விட்டது. அப்படியிருந்தும் கூட, அங்கிருந்தபடியே ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் தமிழ் பட வேலைகளையும் கவனித்தேன்.
கேள்வி:- இனிமேலாவது அதிக தமிழ் படங்களுக்கு இசையமைப்பீர்களா?
பதில்:- நிச்சயமாக… இனிமேல் அதிக தமிழ் படங்களுக்கு இசையமைப்பேன். இப்போது கோச்சடையான், மரியான், கவுதம் மேனன் படம், சித்தார்த் நடிக்கும் புதிய படம், ராஜீவ்மேனன் டைரக்டு செய்யும் படம் என 5 தமிழ் படங்களுக்கு இசையமைத்து வருகிறேன்.
கேள்வி:- இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்ன?
பதில்:- 14 வருடங்களாக நாடு நாடாக சுற்றி விட்டேன். நான் சென்னையை விட்டு வெளிநாடுகளுக்கு புறப்படும்போதெல்லாம் என் மகன் அமீன், மகள்கள் ரமா, கதீஜா ஆகிய மூன்று பேரும், ‘ஏன் டாடி வெளிநாட்டுக்கு போறீங்க, இங்கேயே இருந்து விடுங்களேன்…’என்று ஏக்கத்துடன் கேட்கிறார்கள். அவர்களின் பிரிவை நானும் விரும்பவில்லை. பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். அவர்களின் விருப்பத்தை தந்தை என்ற முறையில் நான் நிறைவேற்ற வேண்டும் அல்லவா?
கேள்வி:- மற்ற மொழி படங்களை விட, தமிழ் படங்களுக்கு எந்த அளவுக்கு முன்னுரிமை கொடுப்பீர்கள்?
பதில்:- தமிழ் படங்களுக்கு இசையமைக்கத்தான் எனக்கு இஷ்டம். என் இசையில் படம் தயாரித்தவர்கள், இயக்கியவர்களுக்கு அது தெரியும்.
கேள்வி:- தமிழ் பட உலகுக்கு இப்போது நிறைய இசையமைப்பாளர்கள் வந்து இருக்கிறார்களே…?
பதில்:- அத்தனை பேரையும் வரவேற்கிறேன்.
கேள்வி:- உங்கள் இசையில், யுவன் சங்கர் ராஜா பாடியதாக கேள்விப்பட்டோமே?
பதில்:- உண்மைதான். ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில், பரத்பாலா டைரக்டு செய்து, தனுஷ் நடித்துள்ள ‘மரியான்’ படத்துக்காக, தனுஷ் ஒரு பாடலை எழுதியிருக்கிறார். அந்த பாடலை யுவன் பாடினால் பொருத்தமாக இருக்கும் என்று சொன்னார்கள். யுவன் ‘வாய்ஸ்’ கேட்டு, அவரையே பாடவைத்தோம். ஒன்றரை மணி நேரத்தில் அவர் பாடி முடித்து விட்டார்.
கேள்வி:- பொதுவாகவே நீங்கள் பெரிய நடிகர்கள், பெரிய டைரக்டர்களின் படங்களுக்கு மட்டுமே இசையமைக்கிறீர்கள் என்று ஒரு பேச்சு இருக்கிறது. அதற்கு உங்கள் பதில் என்ன?
பதில்:- ‘சக்கரக்கட்டி’ என்று ஒரு படத்துக்கு இசையமைத்தேன். அது, பெரிய நடிகர் படம் இல்லை. அந்த படம் தோல்வி அடைந்து விட்டது. நான் இசையமைக்கிறேன் என்றால், எதிர்பார்ப்பு அதிகமாகி விடுகிறது. ஜனங்கள் எனக்கு ஒரு இடம் கொடுத்து இருக்கிறார்கள்.
அவர்களை நான் ஏமாற்றக்கூடாது. அவர்கள் கொடுத்த வாய்ப்பை தவறவிடக் கூடாது. சாதாரணமாக எந்த படமும் பண்ண முடியாத நிலையில், நான் மாட்டிக்கொண்டிருக்கிறேன். இசை, வெற்றி-தோல்விக்கு அப்பாற்பட்டது.
கேள்வி:- முன்பு இரவு நேரங்களில்தான் இசையமைப்பீர்கள். இப்போதும் அதை தொடர்கிறீர்களா?
பதில்:- எனக்கு இப்போது நரை வந்து விட்டது. முன்பு மாதிரி ஒரேயடியாக இரவில் வேலை செய்வதில்லை என்றாலும், தேவைப்பட்டால் இரவு நேரங்களில் பணிபுரிகிறேன்.”
இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் கூறினார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &