BREAKING NEWS

Apr 28, 2013

மே தினக் கூட்டங்கள் கட்சிகள் தயார்! தொழிலாளர் நிலை ?

மே தினக் கொண்டாட்டங்களுக்காக கட்சிகள் தயார்! தொழிலாளர்கள் நிலை ?
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜே. வி. பி. ஆகிய கட்சிகளின் மே தினக் கொண்டாட்டங்கள் இம்முறை கொழும்பில் நடைபெறவுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் இம்முறை கட்சியின் தலைமை யகமான ஸ்ரீகொத்தாவில் நடைபெறவுள்ளதுடன் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ளும் மே தினக் கூட்டம் குருநாகலில் நடைபெறவுள்ளது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின விழா இம்முறை கிளிநொச்சியில் நடைபெறவுள்ளதுடன் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். 

ஜே. வி. பி.யின் மே தினக் கூட்டம் கொழும்பு பி. ஆர். சி. மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இதேவேளை, இ. தொ. கா., மலையக மக்கள் முன்னணி மற்றும் பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் நுவரெலியா, ஹட்டன், கண்டி, நகர்களிலும் மே தினக் கூட்டங்களை நடத்தவுள்ளன. 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டம் இம்முறை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு பொரளையிலுள்ள கெம்பல் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

மே முதலாம் திகதி நண்பகல் 12 மணிக்கு கொழும்பு ‘தாமரைத் தடாகம்’ மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கிற்கு முன்னால் ஆரம்பமாகும் மே தின ஊர்வலம் பேரணியாக கெம்பல் பார்க் மைதானத்தைச் சென்றடைந்ததும் மே தினக் கூட்டம் பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டம் இம்முறை ‘நாட்டைக் கட்டியெழுப்பும் மே தினம்’ எனும் தொனியில் கொண்டாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டம் இம்முறை நுவரெலியா நகரில் நடைபெறவுள்ளது. இ. தொ. கா. பொதுச் செயலாளர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் தலைமையில் மலையக பாரம்பரிய கலாசார அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த மே தின விழா நடைபெறவுள்ளது. 

மலையக மக்கள் முன்னணியின் மே தின விழா லிந்துலையில் நடைபெறவுள்ளது. லிந்துலை சென். கூம்ஸ் தேயிலை ஆராய்ச்சி மைதானத்தில் நடைபெறும் இம் மேதின விழாவை மலையக மக்கள் முன்னணி, மலையக தொழிலாளர் முன்னணி ஆகிய கட்சிகள் இணைந்து நடத்தவுள்ளன. 

தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தினக் கூட்டம் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பி. திகாம்பரம் தலைமையில் தலவாக்கலையில் நடைபெறவுள்ளது. விவசாய தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டம் அதன் தலைவர் ஆர். எம். கிருஷ்ண சாமியின் தலைமையில் பதுளையில் நடைபெறவுள்ளது. 

இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் மே தினக் கூட்டம் கண்டி நகரில் சங்கத்தின் தலைவர் தம்பிக்க ஜயவர்தன, பொதுச் செயலாளர் கிங்ஸ்லி இராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெறவுள்ளது. 

இதேவேளை ஜனநாயக தொழிலாளர் காங்கிரசின் மே தின விழா அட்டன் பெல்வூட் ஹோட்டல் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. 

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &