BREAKING NEWS

Apr 18, 2013

ஒபாமாவுக்கும் ’ரைசின்’ விஷம் தடவிய கடிதம்: அமெரிக்காவில் பீதி


வாஷிங்டன்: அமெரிக்க செனட் உறுப்பினருக்கு விஷம் தடவிய கடிதம் வந்ததை தொடர்ந்து ஒபாமாவுக்கும் அத்தகைய கடிதம் வந்துள்ளதால், அமெரிக்காவில் பீதி நிலவுகிறது. அமெரிக்க ஜனாதிபதி இல்லமான வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஒபாமா பெயருக்கு ஒரு மர்ம பொருள் அடங்கிய கடிதம் வந்தது. தபால்களை சோதனையிடும் பிரிவுக்கு வந்த அக்கடிதத்தை விஞ்ஞான ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

முதல்கட்ட சோதனையில், அந்த கடிதத்தில் ‘ரைசின்‘ என்ற கொடிய விஷம் வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி எப்.பி.ஐ. அதிகாரிகளும், அமெரிக்க பாராளுமன்ற போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களுடன் இணைந்து அமெரிக்க ரகசிய போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒபாமாவுக்கு இந்த கடிதம் வருவதற்கு ஒரு நாள் முன்புதான், அமெரிக்க செனட் உறுப்பினர் ரோஜர் விக்கருக்கு கொடிய விஷம் தடவிய கடிதம் வந்தது. இவர், மிசிசிபியில் இருந்து குடியரசு கட்சி சார்பில் செனட்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். கடிதத்தை சோதனை செய்ததில், அதில் ‘ரைசின்' விஷம் தடவப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்த நிலையில்தான், ஒபாமாவுக்கும் விஷம் தடவிய கடிதம் வந்துள்ளது.அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் குண்டு வெடிப்பு நடந்து 3 பேர் பலியான ஓரிரு நாளில் அடுத்தடுத்து இந்த கடிதங்கள் வந்திருப்பதால், அமெரிக்காவில் பெரும் ‘பீதி' நிலவி வருகிறது.

அமெரிக்காவில், கடந்த 2001-ம் ஆண்டு, கடித பார்சல் மூலம் ‘ஆந்த்ராக்ஸ்' கிருமிகளை அனுப்பி வைத்து தீவிரவாதிகள் பீதி உண்டாக்கினர். அதன்பிறகு நீண்ட காலம் கழித்து, தற்போது விஷம் தடவிய கடிதங்கள் வந்திருப்பது, அமெரிக்க மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

(கடிதத்தை கையாளும்போது, எந்த வகையிலாவது வாயில் பட்டு விட்டால், உயிரைக் குடிக்கும் அபாயம், இந்த விஷத்துக்கு உள்ளது. இத்தகைய கொடிய விஷத்தை அனுப்பியது யார் என்று தெரியவில்லை.)

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &