ஆறாவது ஐ.பி.எல். இருபதுக்கு - 20 போட்டிகள் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இதற்கான தொடக்க விழா நாளை
இடம்பெறவுள்ளது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் எதிர்வரும் 3 ஆம் திகதி நடைபெறும் ஆரம்ப ஆட்டத்தில் கொல்கத்தா நைட்டைர்ஸ்- டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் ஐ.பி.எல். போட்டியின் தொடக்க விழா நாளை செவ்வாய்க்கிழமை கொல்கத்தாவில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. சால்ட்லேக் மைதானத்தில் நடைபெறும் கோலாகல தொடக்க விழாவில் பிரபல இந்தி நடிகைகளான தீபிகா படுகோன் மற்றும் கத்ரீனா கைப் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
இருவரது நடனங்களும் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும். இதேபோல கொல்கத்தா அணியின் உரிமையாளரும், நடிகருமான ஷாருக்கானும் தொடக்க விழாவில் நடனம் ஆடுவுள்ளார். ஷாருக்கானின் ரெட்சில்லி நிறுவனம் தான் தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகளை செய்துவருகிறது.
தீபிகா படுகோன் ஐ.பி.எல். தொடக்க விழாவில் நடனமாட இருப்பது இது 2ஆவது முறையாகும். ஏற்கனவே 2010 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்று நடனமாடினார். இதேவேளை, நாளைய தொடக்க விழாவை ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேர் நேரில் பார்த்து ரசிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.பி.எல். தொடக்க விழாவை சோனி செட்மேக்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்யவுள்ளது. நாளை இரவு 7 மணிக்கு தொடக்க விழா நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின்றன.
ஐ.பி.எல். இருபதுக்கு -20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதில் இருந்து ஆண்டு தோறும் ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற்று வருகிறன.
இதேவேளை, மே மாதம் 26ஆம் திகதி வரை இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் நடப்பு சம்பியன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் உட்பட 9 அணிகள் பங்கேற்கின்றன. சென்னை, கொல்கததா, மும்பை உட்பட 12 நகரங்களில் இப் போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.