ஷார்ஜாவில் உள்ள குடியிருப்புப் பகுதியான அல்டாவுனில், நேற்று மதியம் தீவிபத்து ஏற்பட்டது. இரண்டு மணி நேரத்திற்கு மேல் கொழுந்து விட்டு எரிந்த இந்த தீயினால், குடியிருப்பின் பத்து மாடிகளும் சேதமடைந்து, 80-க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை இழந்தனர்.
இந்தத் தீயின் தாக்கத்தினால், அருகில் இருந்த அல்ஹபீத் என்ற அடுக்குமாடிக் குடியிருப்பின் இரண்டு பிரிவுகளிலும் வசித்து வந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்தப் பகுதிகளுக்குத் தீ பரவவில்லை.
தகவல் அறிந்த காவல்துறையினரும், ஷார்ஜா, துபாய், அஜ்மான் ஆகிய இடங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட தீயணைப்புத் துறையினரும், இரண்டு மணி நேரம் போராடித் தீயை அணைத்தனர்.
தீப்பிடித்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இதுகுறித்து, காவல்துறையினரும், பொதுமக்கள் பாதுகாப்புத்துறையின் தடயவியல் நிபுணர்களும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புகையில் சிக்கியதால், மூச்சுத்திணறல் ஏற்பட்ட நான்கு பேர் மீட்கப்பட்டு, அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நிலை மோசமடைந்த 55 வயது பெண் ஒருவர், அல் குவைத்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
குடியிருப்பின் இரண்டாவது அல்லது ஏழாவது மாடியில் தீப்பிடித்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஷார்ஜாவின் பொதுமக்கள் பாதுகாப்புத்துறையின் தலைமை நிர்வாக ஜெனரல், பிரிகேடியர் அப்துல்லா சயீத் அல் சுவைதி தெரிவித்தார்.