BREAKING NEWS

Apr 21, 2013

இந்திய சினிமா நூற்றாண்டு விழா சென்னையில்

இந்திய சினிமா தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிறது. முதல் படமான ‘ஹரிச்சந்திரா’ 1913ம் ஆண்டு மே மாதம் 3ம் திகதி வெளியானது. வரும் மே 3ம் திகதியுடன் 100 வருடங்கள் நிறைவடைகிறது.

100 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் வகையில், நூற்றாண்டு விழா சென்னையில் ஜுலை மாதம் 3 நாட்கள் நடைபெற இருக்கிறது. இதுகுறித்து தென்னந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கல்யாண் சென்னையில் பத்திரிகையாளர்களிடம் பேசியது:

“இந்திய சினிமாவுக்கு இந்தாண்டு நூறாவது ஆண்டு. இந்திய சினிமாவில் தென்னிந்திய சினிமாவுக்கு சிறப்பான பங்கு உண்டு. இந்தியாவில் தயாராகும் சினிமாவில், தென்னிந்திய சினிமாக்களே அதிகம். எண்ணங்களில் நீங்காத இடம்பெற்ற பல படங்களை தந்தது தென்னிந்திய சினிமாதான்.

தென்னிந்திய சினிமாவின் தாய்வீடு, சென்னை. அந்த சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, இந்திய சினிமாவின் நூற்றாண்டை என்றும் நினைவில் நிற்கும்படி சிறப்பாக கொண்டாட முடிவு செய்து இருக்கிறது.

அதன்படி, இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா, சென்னையில் வருகிற ஜூலை மாதம் 12, 13, 14 ஆகிய தேதிகளில் 3 நாட்கள் நடக்கிறது. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, இந்திய திரைப்பட சம்மேளனத்துடன் இணைந்து இந்த விழாவை நடத்துகிறது.

விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளை சேர்ந்த மூத்த கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டு, அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். விழாவுக்கு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மற்றும் 3 மாநிலங்களை சேர்ந்த முதல்-அமைச்சர்களை அழைக்க முடிவு செய்திருக்கிறோம்.

4 மாநிலங்களை சேர்ந்த நடிகர்-நடிகைகள் விழாவில் கலந்து கொள்வார்கள். விழாவையொட்டி நடிகர்-நடிகைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். ஜூலை 12, 13 தேதிகளில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கிலும், 14-ம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்திலும் நடைபெறும்.

விழா மிக பிரமாண்டமான முறையில் நடைபெறுவதையொட்டி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழி படங்களின் படப்பிடிப்புகளும் 5 நாட்கள் ரத்து செய்யப்படும். அந்த நான்கு நாட்களும் மற்ற பட வேலைகளும் நடைபெறாது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டின் கமிட்டிக்கு தலைவராக டைரக்டர் கே.பாலசந்தர் இருப்பார். இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், எஸ்.எம்.வசந்த், பட அதிபர்கள் டி.சிவா, ஆர்.மாதேஷ் ஆகிய 4 பேரும் அமைப்பாளர்களாக இருப்பார்கள்.

எஸ்.ஏ.சந்திரசேகரன், கே.முரளிதரன், பி.எல்.தேனப்பன், எஸ்.தாணு, டி.ஜி.தியாகராஜன், எம்.சரவணன், பாரதிராஜா, சரத்குமார், ராதாரவி, சிவகுமார், கேயார், பிரபு, ஆர்.பி.சவுத்ரி, ஏ.எம்.ரத்னம், முரளி மனோகர், பி.வாசு, ஏ.எஸ்.பிரகாசம், சுரேஷ் பாலாஜி, கவுதம் மேனன், பாக்யராஜ், அமீர், ஜி.சிவா ஆகியோர் கமிட்டி உறுப்பினர்களாக இருப்பார்கள்.

சினிமா நூற்றாண்டின் நினைவாக பிலிம்சேம்பர் வளாகத்தில் 3 திரையரங்குகள் கட்டப்படுகிறது. அதில், ஒரு திரையரங்குக்கு நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகிய இருவரும் ரூ.1 கோடி நன்கொடை வழங்கியிருக்கிறார்கள். அந்த திரையரங்குக்கு அவர்களின் தந்தை சிவகுமார், தாயார் லட்சுமி ஆகியோரின் பெயர்கள் சூட்டப்படும். ” என்று கூறினார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &