ஆனால், அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. முஷரப்பை உடனடியாக கைது செய்யும்படி போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். நீதிபதியின் உத்தரவை செயல்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்கும் முன்னர், முஷரப்பை அவரது பாதுகாவலர்கள் அவசர அவசரமாக காரில் ஏற்றி அழைத்துச் சென்றனர். நீதிமன்றத்தில் இருந்து தப்பிய முஷரப் இஸ்லாமாபாத் புறநகர் பகுதியான சக் ஷாஸாத் பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டுக்குச் சென்றார். அவரை கைது செய்வதற்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். சற்று நேரத்திற்கு பின்னர் முஷரப் கைது செய்யப்பட்டார். 'முஷரப்பை போலீஸ் காவலில் எடுத்து 2 நாட்களுக்குள் தீவிரவாத (தடுப்பு) சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்' என்று நீதிபதி சவுக்கத் அஜஸ் சித்தீக்கி உத்தரவிட்டார்.
சக்ஷாஜத் நகரில் உள்ள முஷரப்பின் பண்ணை வீடு கிளைச் சிறையாக அறிவிக்கப்பட்டது. இன்று காலை தீவிரவாத (தடுப்பு) நீதிமன்றத்தில் முஷரப் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, முஷரப்பை மே 4ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கும்படி நீதிபதி கவுசர் அப்பாஸ் சைதி உத்தரவிட்டார். இதனையடுத்து முஷரப் சிறையில் அடைக்கப்பட்டார்.