(Kareem Haniffa) கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பொத்துவில் பிரதேசத்தின் ஒரு கிராமத்தின் கிழக்குப் புறமாக கடற்கரையை அண்மித்த பிரதேசம்தான் சின்னப் புதுக்குடியிருப்பு றஹ்மத் நகர், மதுரஞ்சேனை ஆகிய கிராம சேவகர் பிரிவுகளாகும்.
இப்பகுதிகளில் ஏறத்தாழ 1500 தனியான முஸ்லிம் குடும்பங்கள் ஒற்றுமையாக வசித்து வருகின்றன. இப்பிரதேசத்தில் வேறு எந்த மாற்று இனத்தவர் ஒருவரும் வசித்திருக்கவில்லை. இப்பிரதேச எல்லைக்குள் புதைபொருள் ஆய்வு நிலையமும் சிங்கள சகோதரர்கள் எவரும் சூழவர இல்லாமல் "முகுதுமகா' விகாரை எனும் பெயருடன் ஒரு பௌத்த மதகுரு மாத்திரமே உள்ளார்.
உள்ளூர் உல்லாசப் பிரயாணிகளின் உல்லாச புரிதான் றஹ்மத் நகர் சின்னப்புதுக்குடியிருப்பு எனுமிடத்தில் அமைந்துள்ள ஏறத்தாழ 60 அடி உயரமான இயற்கையான மனல் மேடாகும். இதை செல்லமாக மண்மலை என்றும் அழைப்பர். ஆதிகாலத்தில் ஏற்பட்ட தொரு சுனாமியால் இவ்வாறு ஏற்பட்டதாக முதியவர்கள் கூறுவர்.
இப்பிரதேசத்தில் அல்கலீஜ், அல் அக்ஷா, மஸ்ஜிதுல் இஹ்ஸான் ஜூம்மாபள்ளிவாயில்களும், தாறுல் பலாஹ் முஸ்லிம் வித்தியாலயம், அல் முனவ்வறா, அல் நூறானியா ஆகிய பாடசாலைகளும், டுவிங்கல் ஸ்டார், மதுரஞ்சேனை முன்பள்ளி ஆகியனவும் அமையப் பெற்றுள்ளது.
விடுமுறை நாட்களிலும், போயா தினங்களிலும், வெள்ளிக் கிழமை நாட்களில் மாலை வேளையிலும் இம் மண்மலையைக் கண்டு கழிப்பதற்காகவும், ஏறி இறங்குவதற்காகவும் வெளியூர் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் தனியாகவும் குடும்பமாகவும் வந்து செல்வர். இம்மண் மலை அல்லது மணல் மேடானது ஆசியாக் கண்டத்திலேயே பிரபல்யமான பெயர் போன இடமாகும்.
16.2.2013 சனிக்கிழமை மாலை முகுது மகாவிகாரை கடற்கரையோரமாக "டோசர்' சகிதம் மணல்மலையை நோக்கி பாதை இடுவதற்கான முதற்கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு அடையாளமிட்டுக் கொண்டிருந்தது மாலையோடு மாலையாக இவ்விடயம் நிர்வாக ரீதியில் பிரதேச சபைக்கோ, பிரதேச செயலகத்துக்கோ எதுவும் தெரியாது.
தற்செயலாக அப்பகுதியால் சென்ற பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ்.ஏ.வாஸித் இதனைக் கண்ணுற்ற வேளை இதற்கான அனுமதிப் பத்திரத்தைக் கேட்டு உரியவர்களைத் தடுத்து நிறுத்தினார். என்னவென்று வினவியபோது புதைபொருள் திணைக்களத்தினால் அம்பாறை மாவட்ட செயலாளருக்கு முகவரியிடப்பட்ட கடிதமொன்றைக் காட்டினர். மட்டுமல்ல குறித்த மண்மலையின் அதி உச்சமான இடத்தில் பௌத்த சைத்திய போதி ஒன்று அமைக்கப்படவிருப்பதாகவும் அதற்கான கட்டுமாணப் பொருட்களை கொண்டு செல்வதற்காக தற்காலிகமாக இப்பாதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கான முஸ்தீபுகளை முகுது மகாவிகாரை விகாராதிபதியே முன்னின்று செயற்படுவதாகவும், அம்பாறை மாவட்ட ஆளும் கட்சி அரசியல்வாதி ஒருவர் "தெயட்ட கிருள' என்ற மகுடத்தில் ரூபா 50 லட்சம் இவ்விகாரையின் அபிவிருத்திக்காக ஒதுக்கியுள்ளதாகவும் அறிய முடிகிறது.
மண்மலை உச்சியில் ஏறிநின்று பார்த்தால் முழு பொத்துவில் ஊரும் அண்மைக்கிராமங்களான ஊறணி, கோமாரி, லகுகல, அறுகம்பை, உல்லை ஆகிய பிரதேசங்களும் பச்சைப் பசேலென தெட்டத் தெளிவாக தெரியும். இராக் காலத்தில் நிலவு வெளிச்சத்தில் ஊரைச் சூழவுள்ள கிராமங்களின் மின் விளக்குகள் வானிலுள்ள நட்சத்திரங்கள் போல் ஜொலித்துக் கொண்டிருக்கும்.
இவ்வாறான 100 வீதமான முஸ்லிம் மக்கள் வாழும் இப் பிரதேசத்தில் 70 அடி சுற்றளவும் 200 அடி உயரமும் கொண்ட பௌத்த சைத்திய ஒன்று நிர்மாணிக்க முகுது மகாவிகாரை பௌத்த மதகுருவால் திட்டமிடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, இவ்விடயம் காரணமாக அம்பாறை மாவட்ட ஆளும் கட்சி, எதிர்கட்சி, முட்டுக் கொடுக்கும் முஸ்லிம் காங்கிரஸ், பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் அமைச்சர்கள், நடுநிலை பேணும் உண்மையான பௌத்த மதத்தைப் பின்பற்றும் சிங்கள சகோதரர்கள் ஆகியோர் வாய்மூடி இருக்காது மௌனிகளாக சைத்திய மண்மலை உச்சியில் உருவாவதைத்தடுத்து நிறுத்தி சிங்கள முஸ்லிம் இன ஒற்றுமைக்கு வழி அமைத்துத் தருமாறு பீதியுடனுள்ள அப்பாவி முஸ்லிம் மக்கள் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
Feb 22, 2013
பொத்துவில் மண் மலையில் 'சைத்திய' அமைக்கும் பணிகள்???
Posted by AliffAlerts on 19:30 in NL | Comments : 0
